ஹட்டன் (Hatton) நகரில் வீதியில் கிடந்த ஏ.டி.எம் (ATM) அட்டையை எடுத்து அதன் மூலம் சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்த பாடசாலை மாணவன் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன், கண்டியிலுள்ள (Kandy) கடைகளில் தொலைபேசி பாகங்கள், உடற்கட்டு ஊட்டச்சத்து பொருட்கள் மற்றும் சில ஜோடி காலணிகளை கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தவறவிட்ட ஏ.டி.எம் அட்டையின் உரிமையாளர் ஹட்டன் காவல்நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கமைய, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த மாணவன் பொருட்களை கொள்வனவு செய்த நிறுவனம் ஒன்றில் வழங்கப்பட்ட அவரது உண்மையான பெயர், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கத்தின் அடிப்படையில் காவல்துறையினர் நேற்று (06) மாணவனை கைது செய்துள்ளனர்.
ஹட்டன் பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில் 13ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பாடசாலை மாணவன் நேற்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் 05 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.