கச்சத்தீவு அந்தோணியார் கோவிலுக்கு வந்தபோது கைக்குழந்தையுடன் நடுக்கடலில் தத்தளித்த தம்பதி!

0
163

கச்சத்தீவு அந்தோணியார் கோவிலுக்கு வந்தபோது நடுக்கடலில் கைக்குழந்தையுடன் பரிதாபமாக தத்தளித்த இலங்கை தம்பதியை மீனவர்கள் மீட்டு கரை சேர்த்தனர்.

நாகை அக்கரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்த குமாருக்கு சொந்தமான விசை படகில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 11 மீனவர்கள் நாகை துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று இவர்கள் மீன்பிடித்துக்கொண்டு நாகை துறைமுகத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது நாகை கடற்கரையில் இருந்து 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் நடுக்கடலில் பைபர் படகு ஒன்று தத்தளித்த படி நின்று கொண்டிருந்தது. இதையடுத்து நாகை மீனவர்கள் அந்த படகு அருகில் சென்று பார்த்தனர்.

அதில் கைக்குழந்தையுடன், ஒரு தம்பதி உதவி கேட்டு பரிதாபமாக நின்று கொண்டு இருந்தனர். அவர்களையும், படகையும், நாகை மீனவர்கள் மீட்டு கரை சேர்த்தனர்.

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து நாகை கடலோர காவல்படைக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த கடலோர காவல்படையினர், கியூ பிரிவு போலீசார், உளவுத்துறை போலீசார் தம்பதியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் இலங்கையில் உள்ள வவுனியா மாவட்டம் கல்வெட்டு சந்தி மகாரம்பைகுளம் பகுதியை சேர்ந்த விவசாயி துஸ்வந்தியதேவர், அவருடைய மனைவி துவாரகா, இவர்களுடைய 1½ வயது குழந்தை கதிதா என்பது தெரியவந்தது.

மேலும் இவர்கள் கடந்த 7-ந் தேதி இலங்கையில் இருந்து கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் கோவிலுக்கு படகில் உறவினர்களுடன் வந்ததும், அன்று மாலை 4 மணிக்கு கடலுக்கு அருகில் இருந்த பைபர் படகில் தூங்கி கொண்டு இருந்த போது, காற்றின் வேகத்தில் கரையில் நின்று கொண்டிருந்த பைபர் படகு நடுக்கடலுக்கு இழுத்து செல்லப்பட்டதால் கைக்குழந்தையுடன் தத்தளித்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து கடலோர காவல்படை போலீசார் கைக்குழந்தை உள்பட 3 பேரையும் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here