கட்டாரில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலுக்கு ஐ.தே.க. கண்டனம்!

0
73

இஸ்ரேலால் கட்டார் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டு ஐ.தே.க. இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

கடந்த 2023 ஒக்டோபர் 7 அன்று ஹமாஸ் இஸ்ரேலைத் தாக்கியபோது, ஐக்கிய தேசியப் கட்சி உடனடியாக அத்தாக்குதலைக் கண்டித்ததோடு, அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் விடுவிக்குமாறு கோரியது.

காசா போர் தொடர்ந்தபோது, பாலஸ்தீனிய மக்களின் துன்பங்கள் அதிகரித்த நிலையில், ஐக்கிய தேசியப் கட்சி இஸ்ரேலின் நடவடிக்கைகளைக் கண்டித்து, உடனடியாகப் போரை நிறுத்துமாறு வலியுறுத்தியது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இஸ்ரேலால் கட்டார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு இறைமையுள்ள நாட்டின் மீதான தாக்குதலாகும். அது தீய எண்ணத்துடன் நடத்தப்பட்டுள்ளது. ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான தற்போதைய பேச்சுவார்த்தைகளில் கட்டார் தொடர்ச்சியாக ஒரு முக்கியப் பங்கை வகித்து வருகிறது.

சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்தம் வகிக்கும் ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்துவது, போர் நிறுத்தத்திற்கான மேலதிக பேச்சுவார்த்தை முயற்சிகள் ஒரு சாத்தியமற்ற விடயமாகத் தோன்றுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் ஒருமுறை, காசாவில் நடைபெற்று வரும் அனைத்து தாக்குதல்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், ஹமாஸ் எஞ்சியுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here