அம்பகமுவ பிரதேச செயலாளர் கோரளையில் உள்ள நகரங்களில் பிரதான நகரமாக காணப்படுவது ஹட்டன் நகரம். ஹட்டன் நகரில் எரிவாயு சிலிண்டர்களை முறையாக விநியோகம் செய்வதற்கு முறையான திட்டம் ஒன்றினை இன்று (30) அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அம்பகமுவ பிரதேச செயலாளர் சித்தாரா கமகே தெரிவித்தார்.
புதிய நடைமுறை இன்று ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ஹட்டன் நகரில் கேஸ் (எரிவாயு ) பொது மக்கள் இலகுவாக பெற்றுக்கொள்வதற்காக அம்பகமுவ செயலாளரினால் புதிய நடைமுறையொன்று அறிமுகம் செய்யப்பட்டு அதற்கான முன்கூட்டிய பதிவுகள் இன்று (30) ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது இதில் ஹட்டன் எரிவாயு விற்பனை முகவர்களுக்கு வரும் எரிவாயுவினை முறையாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் பெற்றுக்கொள்ள கூடியவாறு முன்கூட்டியே பதிவுகள் இடம்பெற்று வருகின்றன இதற்கமைய அடுத்த மாதத்திற்கு தேவையான எரிவாயுவினை பாவனையாளர் ஒருவர் பதிவு செய்து கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம் அவருடைய பதிவினை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அவர் ஏப்ரேல் மாத மின்சார பட்டியலினை எடுத்துச் செல்ல வேண்டும் அவ்வாறு பதிவு செய்தவர்களுக்கு தொலை பேசி ஊடாகவோ, குறுஞ் செய்தி ஊடாகவோ அறிவிக்கப்படும் அதனை தொடர்ந்து அவர் எரிவாயு வரிசையில் நிற்காது தங்களது குடும்பத்திற்கு தேவையான எரிவாயுவினை பெற்றுக்கொள்ளலாம் இதன் மூலம் கறுப்புச் சந்தை உருவாவதனையும் தவிர்த்து கொள்ளலாம் அத்தோடு எல்லோருக்கும் எரிவாயு பெற்றுக்கொள்ள கூடிய நிலைமை உருவாவதுடன் மேலதிகமாக எரிவாயுக்களை சேமித்து வைத்துக்கொள்ளும் நிலையும் மாறும் என அதன் போது தெரிவித்தார்.
இதே நேரம் இன்று பதிவு செய்து கொள்ள முடியாதவர்கள் நாளைய தினமும் பதிவு செய்து கொள்ளலாம் அதிலும் விடுப்பட்டவர்கள் நாளை மறுதினம் முதல் நோர்வூட் பிரதேச உப செயலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என இதன் போது அறிவிக்கப்பட்டன.
எது எவ்வாறான போதிலும் குறித்த விடயம் தொடர்பாக போதுமான அளவு பொது மக்களிடம் விளக்கம் இருக்கவில்லை இதனால் பலர் வௌ;வேறு மாதங்களுக்கு உரிய மின்சார பட்டியல்களை எடுத்து வந்திருந்தனர் இவர்களில் பலர் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இது குறித்து பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில் இது ஒரு நல்ல விடயம் இதனை அரசாங்கம் என்ற வகையில் முன்கூட்டியே செய்திருக்க வேண்டும் இந்த திட்டத்தின் மூலம் அனைவருக்கு எரிவாயு பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை உள்ளது. இதன் மூலம் அதிக விலைக்கு கேஸ் விற்பனை செய்வது தவிர்க்கப்படும் என நம்புகிறோம் அதனையும் மீறி விற்பனை செய்தால் அவர்களுக்கு எதிராக உரிய சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்ன நடைமுறைக்கு வந்தாலும் வரிசையில் நின்று வாங்க வேண்டிய துர்பாக்கிய நிலையினையும் தவிர்ப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பலரும் தெரிவித்தனர்.
இதே நேரம் இந்த புதிய நடைமுறை தொடர்பாக பலர் அறிந்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மலைவாஞ்ஞன்