காங்கிரஸ் என்றும் உங்களுடன் இருக்கும்.

0
130

நாட்டில் இன்று எல்லா துறைகளிலும் ‘சிஸ்டம்’ மாறியுள்ளது. ஆனால் பெருந்தோட்டத்துறை மட்டும் 150 ஆண்டுகளுக்கு மேலாக அப்படியே உள்ளது. இந்நிலைமை மாற வேண்டும். அதனை செய்வதற்கே நாம் வந்துள்ளோம். இதற்கு மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பாலின சமத்துவம் என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அட்டன் மாநிலத்திற்கான மகளிர் தின விழா 13.03.2022 அன்று காலை கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலய கலாச்சார மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ கப்பல் துறை, ஹோட்டல்துறை என எல்லா துறைகளிலும் ‘சிஸ்டம்’ மாறியுள்ளது. ஆனால் பெருந்தோட்டத்துறை மட்டும்தான் மாறவில்லை. நமது அழிவுக்கு நாமேதான் காரணம். ஏனெனில் நாளொன்றுக்கு 20 கிலோ கொழுந்து பறிக்க முடியாது, தோட்டங்கள் எல்லாம் காடாகியுள்ளது என தோட்டத் தொழிலாளர்களுக்காக நாம் நீதிமன்றத்தில் வாதிட்டு வருகின்றோம். ஆனால் நிர்வாகங்களால் நடத்தப்படும், கொழுந்து பறிக்கும் போட்டியில் பங்கேற்று, 3 மணிநேரத்துக்குள் 40 கிலோ பறிந்துள்ளனர். கோடி நன்றிகள், பாராட்டியே ஆக வேண்டும். 20 கிலோ பறிக்கமுடியாது என்கிறீர்கள், அங்கே 40 கிலோ பறிக்கின்றனரே என எம்மிடம் கேட்கப்படுகின்றது.

தொழிலாளர்களை ஊக்குவிப்பதற்காக அல்ல, சமாதி கட்டவே கொழுந்து பறிக்கும் போட்டி நடத்தப்படுகின்றது. இது நமக்கு புரிவதில்லை. இதனை சொன்னால், ஜீவன் தொண்டமான் விமர்சிக்கின்றார் என கூறுகின்றனர். எனக்கு பாராட்டி பேசி பழக்கம் இல்லை. தவறு இடம்பெற்றால் அதனை தைரியமாக சுட்டிக்காட்டுவேன்.

மலையகத்தில் அமைச்சு பதவியை வகித்தவருக்கும், எனக்கும் இடையில் தனிப்பட்ட ரீதியில் முரண்பாடு இல்லை. அரசியல் ரீதியிலான முரண்பாடுகளே உள்ளன. ‘மலையக மக்களுக்காக இறுதி மூச்சு இருக்கும்வரை செயற்படுவேன்.” என அவர் கூறியுள்ளார். அந்த செய்தி சமூக ஊடகங்களில் வந்ததும், ‘நீ எப்ப செத்துபோவ’ என சிலர் கருத்து பதிவிடுகின்றனர். இப்படியான அரசியல் வேண்டாம். நமது கலாச்சாரமும் மாறவேண்டும்.

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள சுகாதார துறையை மத்திய அரசு பொறுப்பேற்றுள்ளது. அதற்கு நாம்தான் காரணம். ஆனால் அதனை வைத்து அரசியல் செய்யவில்லை. நாம் 10 விடயங்களை செய்தால்கூட, செய்யாத 11 ஆவது விடயம் பற்றியே பேசப்படுகின்றன. நம்பிக்கையை இழந்துவிடவேண்டாம். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பயணம் தற்போது சற்று மெதுவாக இருந்தாலும் நாம் முன்னோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றோம் என்பதை கூறியாக வேண்டும். காங்கிரஸ் என்றும் உங்களுடன் இருக்கும்.” – என்றார் ஜீவன் தொண்டமான்.

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here