தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக யால பூங்கா காலவரையறையின்றி மூடப்படுவதாக யால பூங்காவின் பராமரிப்பாளர் மனோஜ் வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
யால பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் பயணிக்கும் பூங்கா பகுதியின் சுமார் 75% பகுதிகள் மற்றும் சஃபாரி ஜீப்கள் பயன்படுத்தும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையினால் பூங்காவை காலவரையறையின்றி மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பூங்காவிற்கு செல்லும் பாலதுபன பிரதான நுழைவாயில் பகுதியும் வெள்ளத்தில் மூழ்கியதால், பூங்காவில் உள்ள சுற்றுலா மாளிகைகளில் இருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் அந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் இருந்து யால பூங்காவிற்குள் நுழையும் இரண்டு நுழைவாயில்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பூங்கா மற்றும் மெனிக் கங்கையில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி வழிவதாக பூங்காவின் பராமரிப்பாளர் மனோஜ் வித்யாரத்ன தெரிவித்தார்.
இந்தக் காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வருவதால் அனைத்து சுற்றுலா பங்களாக்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த சுற்றுலாப் பயணிகள் யால வலயங்கள் 4, 5, 6 மற்றும் உடவல மற்றும் லுணுகம்வெஹர வலயங்களுக்குச் செல்ல முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கடகமுவ நுழைவாயில் திறக்கப்பட்டுள்ளதால், அந்தப் பகுதிக்குள் செல்வதற்கு எவ்வித தடையும் இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.