லங்கா பிரீமியர் லீக் தொடரில் கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கு எதிராக இன்று பிற்பகல் ஆரம்பமான போட்டியில் 102 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ், தனது வெற்றிக் கணக்கினை விட்டுக் கொடுக்காது தக்க வைத்துள்ளது.
2021 லங்கா பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடரின் 17 ஆவது ஆட்டம் இன்று பி.ப. 3.30 மணிக்கு அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான கொழும்பு ஸ்டார்ஸ் மற்றும் திசர பெரேரா தலைமையிலான ஜப்னா கிங்ஸ் அணிகளுக்கு இடையில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ஓட்டங்களை குவித்தது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய கோஹ்லர்-காட்மோர் மற்றும் உபுல் தரங்க ஜோடி முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 110 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக் கொடுத்தது.
பின்னர் 11.4 ஆவது ஓவரில் உபுல் தரங்க 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அடுத்து வந்த அஷான் ரந்திகா 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த காட்மோர் 55 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கலாக 93 ஓட்டங்களை பெற்று 16.1 ஓவரில் நவீன் உல்-ஹக்கின் பந்து வீச்சல் எல்.பி.டபிள்யூ ஆனார்.
இறுதியாக ஜப்னா கிங்ஸ் 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ஓட்டங்களை பெற்றது.
தொடர்ந்து 120 பந்துகளில் 193 என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட கொழும்பு ஸ்டார்ஸ் அணியால் எதிரணியின் பந்து வீச்சுக்கு நீண்ட நேரம் தாக்க பிடிக்க முடியவில்லை.
15.5 ஓவர்களுக்கு மாத்திரம் தாக்குப்படித்த அவர்கள் 91 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.
அணி சார்பில் அதிகபடியாக டாம் பான்டன் 30 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் ஜப்னா கிங்ஸ் சார்பில் 2.5 ஓவர்களுக்கு 13 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். விஜயகாந்த் வியாஸ்காந்த் 3 விக்கெட்டுகளையும், மகேஷ் தீக்ஷண 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.