கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவைக் கொலை செய்த இரு துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த ஜூலை மாதம் 8ஆம் திகதி அத்துருகிரியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து, எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.நீதிமன்ற அனுமதியின் பேரில் சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் போது ஏனைய குழுவினர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கிளப் வசந்தவைக் கொல்ல வந்த இரண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களும் முன்னாள் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இக்கொலைக்குப் பின்னர் அவர்கள் தப்பிச் செல்வதற்காக விசேட வாகனம் ஒன்றும் தயார் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதன் ஊடாக அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் உள்ளிட்ட குழுவினர் அத்துரிகிரிய பிரதேசத்தில் 6 மாத காலத்திற்கு வாடகை வீடொன்றையும் எடுத்துள்ளதாகவும், அதற்காக 06 இலட்சம் ரூபா பணத்தை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்கு தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் கயங்க மாரப்பனவின் ஆலோசனையின் பேரில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேவேளை, நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்கள் மாத்திரமே கைது செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.