குன்னுார் : குன்னுார் ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவ முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி உள்பட 12 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீலகிரி மாவட்டம், குன்னுார், வெலிங்கடனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி உள்ளது. இங்கு இன்று(டிச., 8) நடக்கவிருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர், கோவை மாவட்டம், சூலுாரிலுள்ள ராணவ விமானப்படைத் தளத்திலிருந்து, 11.30 மணியளவில் ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி கிளம்பினர்.
ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பாதையிலுள்ள காட்டேரி, நஞ்சப்பா சத்திரம் எனும் பள்ளத்தாக்குக்கு மேலே பறந்த போது கடும் மேகமூட்டமான கால நிலை நிலவியது. இதனால், ஏற்பட்ட காலநிலை குழப்பம் காரணமாக, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விழுந்து எரிந்தது. இதில், முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். இவர்களின் உடல்கள் உள்பட 10 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு குன்னுார் ராணுவ மருத்துவ மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். மற்றவர்களின் கதி என்னவானது என தெரியவில்லை.