ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள், தலைவர்கள், தளபதிகள் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்ற நிலை காணப்படுகிறது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. அந்த நாடுகளின் படை தளங்கள் அமைந்த வளைகுடா நாடுகளையும் ஈரான் தாக்கி வருகிறது. இந்த சூழலில், குவைத் நாட்டின் மின்சாரம், நீர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இன்று வெளியிட்ட அறிக்கையில், குவைத்தில் உள்ள மின்சார மற்றும் நீர் சுத்திகரிப்பு ஆலையின் கட்டிடம் ஒன்றின் மீது நடந்த ஏவுகணை தாக்குதலில் இந்தியர் ஒருவர் பலியாகி உள்ளார்.
ஆலைக்கும் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. குவைத் மீது ஈரானின் கடுமையான தாக்குதலின் ஒரு பகுதியாக இந்த சம்பவம் நடந்துள்ளது என அதுபற்றி வெளியான தகவல் தெரிவிக்கின்றது. இதனை தொடர்ந்து தொழில் நுட்பம் மற்றும் அவசரகால குழுக்களை சேர்ந்தவர்கள் உடனடியாக சென்று, சம்பவத்திற்கு பின்னர் ஆலையை மீண்டும் செயல்பட வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
குவைத்தின் பாதுகாப்பு மற்றும் தொடர்புடைய அதிகாரிகளின் முழு ஒத்துழைப்புடன் அந்த பகுதியை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என அமைச்சகம் தெரிவித்து உள்ளது. பொதுமக்கள் அமைதியாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வதந்திகளை பரப்புபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது. நிலைமை சீரானதும் அதுபற்றிய தகவல் வெளிப்படையாக தெரிவிக்கப்படும் என்றும் எரிசக்தி அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறினார்.




