சஜித் பிரேமதாஸ தலைமையில் அவசர இராஜதந்திர சந்திப்பு!

0
10

உக்கிரமடைந்து வரும் மத்திய கிழக்கு நெருக்கடியால் இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள அபாயங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்று அவசர சந்திப்பு நடைபெற்றது.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள், முன்னாள் தூதுவர்கள் மற்றும் சர்வதேச உறவுகள் துறைசார் புத்திஜீவிகள் கலந்துகொண்டனர்.

அங்கு கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பின்வரும் முக்கிய விடயங்களைச் சுட்டிக்காட்டினார்.

கடல் எல்லைக்குள்
போர் அபாயம்

“மத்திய கிழக்கு மோதல்கள் இப்போது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை நேரடியாகப் பாதித்துள்ளன. கடந்த வாரம் காலி கடற்பரப்பிற்கு மிக அருகாமையில் ஈரானியப் போர்க்கப்பலான ‘ஐரிஸ் டேனா’, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் இலங்கைக்கு ஆபத்தான முறையில் நெருக்கமாகிவிட்டதை உணர்த்துகின்றது. டித்வா சூறாவளிப் பாதிப்பிலிருந்து மீண்டு வரும் வேளையில், இவ்வாறான பூகோள அரசியல் மோதல்கள் எமது மீட்சியைப் பாதிக்கும்.” – என்று சஜித் தெரிவித்தார்.

இவ்விவகாரத்தில் அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய நான்கு முன்னுரிமைத் துறைகளை அவர் முன்வைத்தார்.

வலுச்சக்தி அவசர நிலை பிரகடனம்

“தற்போது இலங்கையிடம் ஒரு மாதத்துக்கு மட்டுமே எரிபொருள் கையிருப்பு உள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் ஏற்படும் தடைகளால் எரிபொருள் விலை உயரும் அபாயம் உள்ளது. இதற்குத் தீர்வாகத் தாமதமின்றி சூரிய மற்றும் காற்றாலை மின் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

வெளிநாட்டுத் தொழிலாளர் பாதுகாப்பு

மத்திய கிழக்கில் உள்ள 1.5 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களின் வருமான வழிகளைப் பாதுகாக்க வேண்டும். மோதல் சூழலிலும் அவர்கள் தங்களது ஊதியத்தைப் பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பும் வகையில் விசேட தொழில்நுட்ப உதவி முறைமையை உருவாக்க வேண்டும்.

ஏற்றுமதிப் பொருளாதாரத்தைப் பாதுகாத்தல்

கடல் போர் அபாயக் காப்புறுதிக் கட்டணங்கள் மும்மடங்கு அதிகரித்துள்ளன. இதனால் தேயிலை மற்றும் ஆடைத் தொழில்துறையினர் எதிர்கொள்ளும் மேலதிக வணிகச் செலவுகளை மானியமாக வழங்க அரசு விசேட காப்புறுதி நிதியத்தை உருவாக்க வேண்டும்.” – என்றும் சஜித் கூறினார்.

இராஜதந்திர நடுநிலைமை

ஈரானிய வீரர்களை மீட்ட இலங்கை கடற்படையினரைப் பாராட்டிய அவர், வெறும் கண்காணிப்பாளராக இருக்காமல் ‘இந்தியப் பெருங்கடல் பிராந்திய சங்கத்தின்’ தலைமைப் பதவியைப் பயன்படுத்தி, கடல்வழிப் பாதைகள் இராணுவமயமாக்கப்படுவதைத் தடுக்க இலங்கை முன்னிற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

குறை கூறுவதை விட ஆக்கபூர்வமான தீர்வுகளை முன்வைப்பதே எதிர்க்கட்சியின் நோக்கம் என்று தெரிவித்த அவர், சர்வதேச விலை உயர்வைக் காரணம் காட்டி மக்கள் மீது மேலதிக வரிச் சுமைகளை ஏற்றி நசுக்கக் கூடாது என்றும் அரசை எச்சரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here