சம்பள பிரச்சினை தொடர்பாக 01.11.2018 அன்று தீர்வு எட்டப்படும் – அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு!!

0
157

தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக் கொள்வதற்கு கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், 01.11.2018 அன்று 11 மணியளவில் இதற்கான அடுத்த நடவடிக்கை தொடர்பான தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.

இறம்பொடை தொண்டமான் கலாச்சார மண்டபத்திற்கு 31.10.2018 அன்று விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அமரர்.சௌமிய மூர்த்தி தொண்டமானின் உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

புதிய அரசாங்கம், புதிய பிரதமர் என உருவாக்கப்பட்ட நிலையில் பெருந்தோட்ட அமைச்சு நமது வடிவேல் சுரேஷ் அவர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அதேபோன்று தோட்ட உட்கட்டமைப்பு சமூதாய அபிவிருத்தி தொடர்பில் அமைச்சு பதவி தனக்கு கிடைத்துள்ளது.

Ramboda (5) Ramboda (3) Nuwaraeliya Ga (5) Nuwaraeliya Ga (2) Nuwaraeliya Ga (1)

இந்தநிலையில் புதிய பிரதமரிடம் கோரிக்கையாக முன்வைக்கப்பட்ட தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளம் எம்மால் பெற்றுக்கொடுக்கப்படும் என்ற பூரண நம்பிக்கை இருப்பதாக தெரிவித்த அவர் இதற்காக 01.11.2018 அன்று பெருந்தோட்ட முதலாளிமார் கம்பனி அதிகாரிகள், தொழிற்சங்கங்கள் உள்ளடங்களாக பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவிருக்கின்றது.

இந்த பேச்சுவார்த்தை தொடர்பில் அரசாங்கத்திற்கும் நாம் அறிவித்துள்ளோம். இந்தநிலையில் இந்த பேச்சுவார்த்தையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுப்பதற்கு இலக்கினை முன்வைத்து பேசப்படவுள்ளது.

எது எவ்வாறாக இருப்பினும் ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளமாக தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுப்போம் என்ற நம்பிக்கை எம்மிடம் அதிகமாகவே உள்ளது எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர்.புஷ்பகுமாரவை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் சந்தித்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக நீண்டநேரம் கலந்துரையாடியமை குறிப்பிடதக்கது.

 

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here