சம்பள முன்மொழிவு என்பது தற்காலிகதீர்வாகவே அமையும் – எமக்கு நிரந்தர தீர்வு அவசியம்

0
128

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாட் சம்பள முறைமை மாற்றப்பட வேண்டும். அவர்களுக்கு நியாயமான வருமானம் – இலாபம் கிடைக்ககூடிய வகையில் புதிய பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம் – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலையில் நேற்று (08.12.2023) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் நாம் உட்பட கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதானிகளுக்கு ஜனாதிபதி தெரியப்படுத்தியுள்ளார். அத்துடன், தற்போதைய சூழ்நிலையில் சம்பள உயர்வு அவசியம் எனவும் ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த முயற்சியை, யோசனையை நாம் வரவேற்கின்றோம். கூட்டு ஒப்பந்த முறைமை ஊடாக குறைந்தபட்ச நாட் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறும், அவ்வாறு இல்லையேல் மாற்று முன்மொழிவை டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் முன்வைக்குமாறும் ஜனாதிபதி பணிப்பு விடுத்துள்ளார்.

ஆயிரத்து 700, 2 ஆயிரம் என இலக்கங்களை மையப்படுத்திக்கொண்டிருக்காமல், நாட் சம்பள முறைமையில் இருந்து மாற வேண்டும். இந்த விடயத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். தற்போதைய சம்பள முன்மொழிவு என்பது தற்காலிக தீர்வாகவே அமையும். எமக்கு நிரந்தர தீர்வு அவசியம். எமது மக்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய வருமானம் கிடைக்கும் வகையிலான பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்.

மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளோம். சிவில் அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமும் பேச்சு நடத்தி வருகின்றோம். எமது அமைச்சின் ஊடாகவும் சம்பள பொறிமுறையொன்று தயாரிக்கப்பட்டு வருகின்றது. கூட்டு ஒப்பந்தம் அவசியம் என்பதை அதனை விமர்சித்த தரப்புகளே இன்று ஏற்றுக்கொண்டுள்ளன. எனவே, அந்த முறைமை மீண்டும் வரும்.” – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here