சிறுமியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

0
201
சிறுமி ஹிசாலினியின் உடல் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் தோண்டி எடுக்கப்பட்டு கண்டி பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. விசேட வைத்திய குழுவினர் முன்னிலையில் இன்று (30/07) மதியம்  12 மணியளவில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதீன் வீட்டில் வீட்டு பணிப்பெண்ணாக இருந்து தீ காயங்களுக்கு உள்ளான நிலையில் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த (15) ஆம் திகதி உயிரிழந்த டயகம மேற்கு பிரிவு தோட்ட சிறுமி ஜூட்குமார் ஹிசாலினியின் உடலம் (30) காலை 8.30 மணிக்கு தோன்றி எடுக்கப்பட்டு உடலம் மேலதிக உடல் கூற்று பரிசோதனைக்காக அனுப்பி வைக்க நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் (29) அனுமதி வழங்கியது.

சிறுமி ஹிசாலினியின் பிரேத பரிசோதனை கொழும்பில் இடம்பெற்றதாகவும், முஸ்லிம் வைத்தியர் ஒருவர் சடலத்தை பரிசோதனைக்கு உட்படுத்தி சடலம் பெற்றோர்களுக்கு கையளிக்கப்பட்டதாகவும் தனது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதால் மீண்டும் சட்ட வைத்தியர் ஒருவர் ஊடாக உடல் கூற்று பரிசோதணை செய்ய வேண்டும் என சிறுமியின் பெற்றோர் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறையிட்டுள்ளதாக  நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி திருமதி லுசாக்கா குமாரி ஜெயரத்ன முன்னிலையில் தெரிவித்தனர்.

இதனையடுத்து சிறுமியின் சடலம் புதைக்கப்பட்ட டயகம மேற்கு தோட்ட புதைக்குழிக்கு கடந்த நான்கு நாளாக பலத்த பொலிஸ் பாதுகாப்பு இடப்பட்டு மீண்டும் சிறுமியின் சடலத்தை தோண்டி பரிசோதனைக்கு அனுப்ப கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதற்கமைவாக  சிறுமியின் சடலத்தை தோண்டி எடுக்க கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்கு சிரேஸ்ட சட்ட வைத்தியர் உள்ளிட்ட பொலிஸார் மற்றும் அதிகாரிகள் அடங்கிய விசேட குழு ஒன்று வருகை தந்துள்ளது.இக்குழுவில் வருகை தந்திருந்த சிறுவர் உரிமை அதிகார சபை அதிகாரிகள் சிறுமியின் சடலத்தை (30) காலை தோண்டுவதற்கு அனுமதி கோரி (30) காலை நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் அனுமதி விண்ணப்பம் வழங்கியிருந்தனர்.

இவ்வாறு வழங்கப்பட்ட அனுமதி விண்ணப்பத்தை பரீசிலனை செய்த நீதிபதி நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி திருமதி லுசாக்கா குமாரி ஜெயரத்ன (30) தனது நேரடி பார்வையில் புதைக்குழி தோண்டப்பட்டு உடலத்தை மீட்க அனுமதியை வழங்கினார்.

இதற்கமைய கொழும்பிலிருந்து வருகை தந்துள்ள வைத்தியர் ஒருவர் உள்ளடங்கிய அதிகாரிகள் மற்றும் கண்டியிலிருந்து வருகை தந்துள்ள இரண்டு வைத்திய அதிகாரிகள்,  சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் மற்றும் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட குழுவினர் நுவரெலியா ,டயகம பொலிஸார் உள்ளிட்டோர் முன்னிலையில் காலை 09 மணிக்கு ஆரம்பித்து நன்பகல் 12 மணியளவில்  டயகம தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த சிறுமியின் உடல் தோண்டி எடுத்து பலத்த பொலிஸ் பாதுகாப்போடு கண்டி பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

டி சந்ரு , கே.சுந்தரலிங்கம் , க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here