பெருந்தோட்டப் பகுதிகளில் சிறுவர்கள் கொழும்பில் வேலைக்கு அமர்த்தப்படுவதும் அவர்கள் மரணமடையும் போது அரசியல்வாதிகளும் சில வேளை அரச சார்பற்ற நிறுவனங்களும் அறிக்கை விடுவதும் ஒரு கலாச்சாரமாகியிருக்கிறது.
சுமதி, ஜீவராணி உட்பட மரணடைந்த பல சிறுவர்கள் தொடர்பாக அரசியல்வாதிகள் ஆர்பாட்டங்களும் அறிக்கைகளும் வெளியிட்டதுடன் சில வழக்குகளும் தொடரப்பட்டன. ஆனால் எவ்வித ஆக்கபூர்வ பிரதிபலனும் இதுவரை கிடைக்கவில்லை.
இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்ற போது அரசியல்வாதிகள் எவரும் உதவி செய்யவில்லை என்று மக்கள் குறை சொல்வதும் ஒரு கலாச்சாரமாயியுள்ளது.
பெரும்பான்மை அல்லது முஸ்லிம் சமுகத்தில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக பத்திரிக்கைகளில் செய்திகளில் வெளிவருவதோ, இந்த விடயங்களில் அரசியல்வாதிகள் தலையிட வேண்டுமென்று கோருவதோ பொதுவாக காண முடியாத விடயமாகவே உள்ளது.
ஆனால் மலையகத்தில், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது, அவர்கள் மரணமடைந்து விட்டால் ஆதங்கப்படுவது அல்லது கூச்சல் போடுவது மலையக சமூகத்தில் ஒரு காலச்சாரமாக உள்ளது.
எனினும் ஒரு விடயத்தை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். பெருந்தோட்டப் பகுதியிலிருந்து சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதும் அவர்கள் மரணமடைவதுமான சம்பவங்கள் தொடர்ச்சியாக குறைவடைந்து குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த முன்னேற்றத்திற்கு காரணம் மக்கள் மத்தியில் கல்வியறிவு வளர்ந்திருப்பதும், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிராக அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்ச்சியாக விழிப்புணர்வூட்டல் செய்ததாகும்.
ஆனால் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை தடுப்பதற்கான அல்லது பெருந்தோட்ட சிறுவர்களின் பிரச்சினைகளை தேசிய மட்டத்திற்கோ சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கோ மலையக அரசியல் தலைமைகள் ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை.
வறுமையின் காரணமாகவே பெருந்தோட்ட சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள் என்பதை இப்போது ஏற்றுக் கொள்ள முடியாது.
தாய் அல்லது தகப்பன் இல்லாத சூழலில் தனி ஒருவராக உழைத்து பிள்ளைகளுக்கு கல்வியறிவூட்டி அவர்கள் தேவைகளை நிறைவேற்றும் தாய்தந்தையர் பெருந்தோட்டங்களில் உள்ளனர்.
மரணமடைந்த அஜித்குமாரின் தாய், தந்தை இருவருமே தொழில் செய்பவர்கள். அத்தோடு அஜித்குமார் வேலைக்கு அனுப்பப்பட்டது தொடர்பாக அஜித்குமார் இறக்கும் வரை தமக்கு தெரியாது என பெற்றோர் கூறுகின்றனர்.
இதிலிருந்து அவர்கள் எவ்வளவு தூரம் பிள்ளைகள் மீது அக்கறையாய் இருந்தனர் என்பது தெளிவாகிறது. அஜித் குமார் பாடசாலையில் இருந்து இடைவிலகிய ஒரு மாணவனாக இருந்தும் அவனை மீள பாடசாலைக்கு சேர்க்க முயற்சி செய்யப்பட்டதாக தெரியவில்லை.
இடை விலகிய மாணவரை மீண்டும் பாடசாலையில் சேர்ப்பதற்கு கிராம சேவகர், சமூர்தி உத்தியோகத்தர் உட்பட பொலிஸாரும் கல்வி அமைச்சின் வளர்ந்தோர் கல்வி அதிகாரிகளும் பெரும் முயற்சி செய்கின்றார்கள்.
இடைவிலகியவர்கள் தொடர்ந்து கல்வியில் அக்கறை செலுத்தாவிட்டால் அவர்களின் எதிர்காலத்தை வளமிக்கதாக்குவதற்கு உதவி செய்ய தங்குமிட வசதியோடு இலவச தொழிநுட்ப பயிற்சி வழங்கும் தொண்டமான் பயிற்சி நிலையம் போன்ற பல நிறுவனங்கள் உள்ளன.
ஆனாலும் இந்த நிறுவனங்களுக்கு போதியளவு மாணவர்கள் வருவதில்லை என்பது அனைவரும் அறிந்த விடயம். இவ்வாறான இன்னும் பல வாய்ப்புகள் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ளன.
இந்த வாய்ப்பு உள்ளது பற்றி மக்களுக்கு விழிப்புணர்வூட்டவோ அவசியமான வேறு வசதிகளை ஏற்படுத்தவோ அரசியல்வாதிகள் அக்கறை காட்டயதில்லை.
இது மட்டுமல்லாமல் ஒரு காலத்தில் மிகவும் சரளமாக நடைபெற்ற சிறுவர்களை வேலைக்கமர்த்தும் தரகர்களின் நடமாட்டம் அரச சார்பற்ற நிறுவனங்களின் முயற்சியால் ஏறக்குறைய முழுமையாக ஒழிக்கப்பட்டடிருந்தாலும் இப்போது அவ்வாறான தரகர்கள் முன்பு போலன்றி கையடக்க தொலைபேசி போன்ற நவீன வசதிகளை பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் கைங்கரியத்தில் தரகர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களை தடுப்பதற்கும் எவ்வித முயற்சியும் செய்யப்படவில்லை. இந்த பின்னனியில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு அவர்கள் மரணடையும் போது வெற்று அறிக்கை விடுவதை விட்டு சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் கலாசாரத்தை ஒழிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
“உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் சொந்தம் கொண்டாட வேண்டும். சிறுவர்களை வேலைக்கு அமர்த்தாதீர்கள்-தரகர்களிடம் ஏமாறாதீர்கள்.
அவ்வாறு செய்தால் அதற்கான பொறுப்பு நீங்களே என்ற கருத்து பெற்றோர்கள் மக்கள் மத்தியில் எடுத்துக் கூறப்பட வேண்டும்.
பாடசாலை செல்ல முடியாத வறுமையில் உள்ள சிறுவர்களுக்கு உதவும் அரச திட்டங்களை பெருந்தோட்ட பகுதியில் தாக்கமுள்ள முறையில் நடைமுறைப்படுத்துமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் பொறுப்பு அரசியல்வாதிகளுக்கு உள்ளது.
அதனை அவர்கள் இதுவரை செய்யவில்லை. பல்வேறு காரணங்களால் இடைவிலகும் மாணவர்களை பாடசாலையில் சேர்ப்பதற்கு உள்ள வேலைத்திட்டங்கள் பற்றிய அறிவூட்டல் அவசியம். சிறுவர்களை, குறுகிய கால வருமானத்திற்கு வேலைக்கு அனுப்புவதை விடுத்து அவர்களின் எதிர்கால வாழ்க்கையை வளப்படுத்தக்கூடிய பயிற்சிகளை பெற்றுக் கொடுப்பதற்கு பெற்றோர் அறிவுறுத்தப்படவும், ஊக்குவிக்கப்படவும் வேண்டும்.
இந்த வசதிகள் தொடர்பாக மக்களுக்கு அறிவூட்டுவதும், அரசுக்கு அழுத்தம் கொடுப்பதும் அரசியல் வாதிகள் செய்ய வேண்டிய வேலை.
நமது மக்களுக்கும் சிறுவர்களுக்கும் அனுதாப அறிக்கைககளினால் எந்தவித பிரயோசனமும் கிடையாது.
இந்த கலாசாரத்தில் இருந்து மலையகம் மீள வேண்டும். சிறுவர்களின் பிரச்சனைகள் சிறுவர் உரிமை அடிப்படையிலேயே பேசப்பட வேண்டும் அது மட்டுமின்றி அதை மேம்படுத்துவதற்கு அரசியல்வாதிகளும் மக்களும் சமூக அமைப்புகளும் தங்களால் ஆனதை செய்யும் புதிய கலாசாரத்தை அறிமுகப்படுத்தவேண்டிய காலம் வந்து விட்டது.
சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது, மரணமடைவது பற்றி பேசும் காலம் கடந்த கலச்சாரம் இத்தோடு நிறுத்தப்பட்டு சிறுவயதில் தொழிலுக்கு அனுப்பும் சிறுவர்களின் பெற்றோர்களுக்கு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். ஏன பிரிடோ நிறுவன வெளிகள இணைப்பாளர் எஸ் கே சந்திரசேகரன் கோரியுள்ளார்.
அக்கரபத்தனை நிருபர்