சூடான் படைகளின் தாக்குதலில் 53 பேர் உயிரிழப்பு

0
11

சூடானின் , டார்ஃபர் பிராந்தியத்தில் உள்ள ஒரு தங்குமிடம் மீது துணை ராணுவப் படைகள் ஷெல் தாக்குதல் மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் அங்கிருந்த குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவர்கள் குழு நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

சூடானில் இராணுவத்துக்கும் துணை இராணுவ பிரிவுக்கும் இடையே போர் மூண்டுள்ளது.

இந்த போரைக் கண்காணிக்கும் மருத்துவ நிபுணர்களின் குழுவான சூடான் மருத்துவர்கள் வலையமைப்பு, வெள்ளிக்கிழமை இரவு எல்-ஃபாஷர் நகரில் துணை இராணுவ படை (RSF) நடத்திய தாக்குதலில் குறைந்தது 14 குழந்தைகள் மற்றும் 15 பெண்கள் உயிரிழந்ததாக கூறுகிறது.

இந்தத் தாக்குதலில் ஐந்து குழந்தைகள் மற்றும் ஏழு பெண்கள் உட்பட 21 பேர் காயமடைந்தனர் என்று அந்தக் குழு தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் பலத்த காயமடைந்தனர் என்று குழு தெரிவித்துள்ளது.

வடக்கு டார்ஃபரின் மாகாணத் தலைநகரான எல்-ஃபாஷரில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான தங்குமிடமான அல்-அர்காம் இல்லத்தை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது. குறித்த தங்குமிடம் ஓம்துர்மான் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ளது.

“இந்தப் படுகொலை, அனைத்து சர்வதேச விதிமுறைகள் மற்றும் சட்டங்களையும் அப்பட்டமாக மீறுகிறது,” என்று மருத்துவக் குழு கூறியது.

இதேநேரம் ஒரு உரிமைக் குழுவான மஷாத் அமைப்பு, RSF ஒரு வருடத்திற்கும் மேலாக நகரத்தின் மீது தனது தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து இந்த தாக்குதல் “மிகவும் கொடூரமான படுகொலைகளில் ஒன்று” என்று விவரித்துள்ளது.

சூடான் இராணுவத்திற்கும் துணை இராணுவப் படைகளுக்கும் இடையிலான மோதலின் மைய பகுதியாக தற்போது எல்-ஃபாஷர் பகுதி மாறியுள்ளது. டார்பூரில் இராணுவத்தின் கடைசி கோட்டையாக இந்த நகரம் உள்ளது.

நகரத்தின் மீது தொடர்ந்து குண்டுவீச்சு நடத்திய துணை இராணுவப் படைகள், ஜூலை மாதம் முழுமையான முற்றுகையை விதித்தன. RSF தாக்குதல்களில் இருந்து தப்பிச் சென்ற மக்களில் பெரும்பாலோர் நகரத்தில் சிக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற உதவி குழுக்கள் எச்சரிக்கின்றன.

மேலும் எல்-ஃபாஷரில் வசிப்பவர்கள் பசி மற்றும் காலரா உள்ளிட்ட நோய் பரவல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

ராணுவத்திற்கும் ஆர்.எஸ்.எஃப்-க்கும் இடையே கொந்தளிப்பான பதட்டங்கள் 2023 ஏப்ரல் இல் தலைநகர் கார்ட்டூமிலும் பிற இடங்களிலும் வெளிப்படையான போராக வெடித்த நிலையில் சூடான் அசாதாரண சூழலை எதிர்கொண்டு வருகிறது.

இந்த சண்டை ஒரு முழுமையான போராக அதிகரித்தது, இது பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களை பறித்ததோடு , 14 மில்லியனுக்கும் அதிகமான மக்களை அவர்களின் வீடுகளிலிருந்து இடம்பெயர செய்துள்ளதோடு நாட்டின் சில பகுதிகளை பஞ்சத்தில் தள்ளி உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here