குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டரும், உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருப்பவருமான அர்ஜுன் எரிகைசி தோல்வி கண்டார்.
குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 4-வது சுற்றுப் போட்டியில் நிஹால் சரினும், சக நாட்டு வீரரான அர்ஜுன் எரிகைசியும் மோதினர்.
வெள்ளை நிறக் காய்களுடன் விளையாடிய நிஹால் சரின், தனது 70-வது நகர்த்தலில் அர்ஜுன் எரிகைசியைத் தோற்கடித்தார். இந்த போட்டியில் அவர் பெறும் முதல் வெற்றியாகும் இது. போட்டியில் முன்னிலை வகிக்கும் ஜெர்மனி வீரர் வின்சென்ட் கீமர், நெதர்லாந்து கிராண்ட் மாஸ்டர் அனிஷ் கிரியுடன் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இந்திய கிராண்ட்மாஸ்டர் கார்த்திகேயன் முரளி, சிறப்பாக விளையாடி நெதர்லாந்தின் ஜோர்டன் வான் வாரெஸ்டை தோற்கடித்தார்.
அமெரிக்க வீரர்கள் ரே ராப்சன், அவான்டர் லியாங் ஆகியோர் மோதிய ஆட்டமும் டிராவில் முடிவடைந்தது. இந்திய வீரர்கள் வி. பிரணவ், விதித் குஜராத்தி ஆகியோர் மோதிய ஆட்டம் டிராவில் நிறைவடைந்தது. சாலஞ்சர்ஸ் பிரிவில் இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் அபிமன்பு புராணிக் சிறப்பாக விளையாடி இந்திய வீராங்கனை ஆர். வைஷாலியை வீழ்த்தினார். 4-வது சுற்றின் முடிவில் கீமர் 3.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.அதற்கடுத்த இடத்தில் அர்ஜுன் எரிகைசி 2.5 புள்ளிகளுடன் உள்ளார். விதித் குஜராத்தி, அனிஷ் கிரி, கார்த்திகேயன் முரளி, ரே ராப்டன் ஆகியோர் தலா 2 புள்ளிகளுடன் அதற்கடுத்த இடங்களில் உள்ளனர்.