டிக்கோயா பிளங்கிபோனி தோட்ட தொழிற்சாலை ஒன்றில் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து இன்ஜெஸ்ட்ரி கிராமசேவகர் பிரிவு தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இன்ஜெஸ்ட்ரி மேற்பிரிவு, கீழ்ப் பிரிவு, பிளங்கிபோனி, பார்த்போர்ட், அப்பகனி, ஹொன்சி ஆகிய தோட்ட பிரிவுகள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் கடந்த இரண்டு வார காலமாக தொழிலுக்குச் செல்ல வில்லை.
இவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்குமாறு இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தினை நிர்வகிக்கின்ற கம்பனியின் உயரதிகாரிகளின் கவனத்திற்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் கொண்டுவந்துள்ளார். அதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் பெருந்தோட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்படும் குடும்பங்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நிலையில் என்பீல்ட் கிராமசேவகர் பிரிவிற்கு உட்பட்ட போடைஸ் தோட்டப் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. புளியாவத்தை நகரம் தொடர்ந்து தனிமைப் படுத்தப்பட்டுள்ளதால் வர்த்தக நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.