மலையக புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப டிக்கோயா பீரட் தோட்ட வைத்தியசாலை பாதையைச் செப்பனிடுவதற்கு 51 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மலையக புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் கண்காணிப்பின் கீழ் இந்தப்பாதையைச் செப்பனிடுவதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று 2 ஆம் திகதி காலை 9 மணிக்கு இடம் பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதிச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் , மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன் , சிங்.பொன்னையா , சரஸ்வதிசிவகுரு , ராம் , ராஜாராம் , உதயகுமார் , ட்ரஸ்ட் நிறுவனத்தலைவர் வி.புத்திரசிகாமணி உட்பட தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்கள் , பிரதேச சபை உறுப்பினர்கள் ,ட்ரஸ்ட் நிறுவன அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
பீரட் தோட்ட வைத்தியசாலை நோர்வூட் பிரதேச பொதுசுகாதார அத்தியட்சகர் பிரிவுக்கு உட்பட்ட தோட்டங்களைச் சேர்ந்த கர்ப்பிணி தாய்மார்களுக்கான சிகிச்சை நிலையமாகவும் செயற்பட்டு வருகின்றது.
எனினும் இந்த வைத்தியசாலைக்குச் செல்லும் பாதை மிக நீண்டகாலமாக செப்பனிடப்படாதிருந்தமைத் தொடர்பில் பிரதேச மக்கள் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தமையைத் தொடர்ந்து அவர் தனது அமைச்சின் ஊடாக 51 இலட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
(க.கிஷாந்தன்)