டெவோன் நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே விழுந்து காணாமல் போன யுவதியை தேடும் பணியில் இராணுவத்தினர்.

0
176

291 அடி உயரமுள்ள டெவோன் நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே விழுந்து காணாமல் போன யுவதியை தேடுவதற்காக இராணுவம் இன்று (23) சிறப்பு நடவடிக்கை மேற்கொண்ட போதிலும், யுவதி குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்ச்சியாக நான்கு நாட்கள் தேடிய பின்னர், சுமார் 200 பேர் அடங்கிய இராணுவ குழு நீர்வீழ்ச்சியின் மேல் மற்றும் கீழ் பகுதிகளைத் இன்றைய தினம் தேடியது.

நீர்வீழ்ச்சியின் மேல் பகுதியை குறுகிய தூரத்திற்கும், நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதியையும் கீழ் பகுதியிலிருந்து மேலே தேடுவதற்கு இராணுவத்தினர் கயிறுகளைப் பயன்படுத்தினர். ஆனால் காணாமல் போன யுவதியின் எந்த தடயமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தேடல் குழு தெரிவித்தது.

கடந்த (18.07.2021) பிற்பகல் நான்கு இளம் பெண்கள் டெவோன் நீர்வீழ்ச்சியைப் பார்வையிட சென்றிருந்தனர். அதுமட்டுமல்லாமல் நீர்வீழ்ச்சியின் மேல் பகுதியில் இருந்து செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டமையும் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இவ்வாறு நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே விழுந்து காணாமல் போனவர் லிந்துலை லென்தோமஸ் தோட்டத்தில் வசிக்கும் எம்.பவித்ரா (வயது – 19) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here