‘கணேமுல்ல சஞ்சீவ’ என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்ட விதம் தொடர்பில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்குள் வைத்து கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக குழுவை சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான செவ்வந்தி நாட்டை விட்டு தப்பி சென்ற நிலையில் நேபாளத்தில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டார்.
நேபாள அரசாங்கத்தின் உதவியுடன் சர்வதேச பொலிஸார் மற்றும் இலங்கை அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கையில் செவ்வந்தி கைது செய்யப்பட்டார்.
செவ்வந்தி பாதாள உலகம் குழுவை சேர்ந்த ஜேகே பாய் என்பவரின் உதவியுடன் இந்தியாவிற்கு படகு மூலம் சென்று அங்கு சுமார் 3 வாரம் தங்கியிருந்த நிலையில் ரயில் ஊடாக நேபாளத்திற்கு தப்பிச் சென்றதாக தெரியவந்துள்ளது.
அவர் தப்பி செல்வதற்காக சுமார் 6.5 மில்லியன் ரூபா வரையில் செலவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் நேபாளத்தில் போலி ஆவணத்துடன் சொகுசு வாடகை வீடொன்றில் தலைமறைவாக இருந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு கடத்தப்பட்ட பத்மே என்பவரின் வாக்குமூலத்திற்கு அமைவாக செவ்வந்தி தலைமறைவாகியுள்ள இடம் தொடர்பில் தகவல்கள் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம் செவ்வந்தியுடன் ஜேகே பாய் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் யாழ்ப்பாண பெண்ணின் பெயரில் போலியான கடவுச்சீட்டை தயாரித்து ஐரோப்பாவிற்கு தப்பிச்சி செல்ல இஷாரா செவ்வந்தி திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நால்வரையும் நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.