அனைத்துத் தமிழ்த் தேசியக்கட்சிகளும் ஒன்றிணைந்து கையெழுத்துப் போராட்டத்தில் பெற்றுக் கொண்ட கையொப்பங்களும் அதனுடன் சேர்ந்த மகஜரும் நேற்றைய தினம் கொழும்பில் ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அண்ட்ரே பிரான்ஸேயிடம் கையளிக்கப்பட்டன.
நேற்று மாலை 3:30 மணியளவில் கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் இது தொடர்பாக சந்திப்பு நடைபெற்றது.
இக்கையொப்பங்களுடன் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து கையொப்பமிட்ட கடிதமும் கையளிக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கட்சிகளின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும், சமத்துவக் கட்சியின் செயலாளர் நாயகம் சந்திரகுமாருடன், கட்சிகளின் ஒருங்கிணைப்பாளரான குருசுவாமி சுரேந்திரனும் இச்சந்திப்பில் கலந்துக்கொண்டனர்.
ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு எழுதப்பட்டு, ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கும், பாதுகாப்புச் சபைக்கும், மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் பிரதியிடப்பட்டுள்ள இக்கடிதத்தில் நீதியரசர் ரீ.வி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி சார்பில் செ. கஜேந்திரன், செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. சிவாஜிலிங்கம் சித்தார்த்தன்,சுரேஷ் பிரேமச்சந்திரன், முருகேசு சந்திரகுமார் மற்றும் நவீந்திரா வேந்தனி ஆகியோர் கையொப்பமிட்டு இருந்தனர்.
காலம் காலமாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அட்டூழிய குற்றங்களுக்கான நீதியை விரைந்து நிலை நாட்டவும். பிரதானமாக செம்மணி உட்பட எமது வடக்கு – கிழக்கு நாயகத்தில் அடையாளப்படுத்தப்படும் மனிதப் புதை குழிகளில் தொடர்ந்தும் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும், கண்டெடுக்கப்படும் ஆதாரங்களை உறுதிப்படுத்துவம் சர்வதேச மேற்பார்வையுடன் கூடிய ஆலோசனை, தொழில்நுட்பம், நிதி, பாதுகாப்பு என பல கோரிக்கைகள் கடிதத்தில் உள்ளடங்கியிருந்தன.
அந்த விடயங்கள் நேரடியாகவும் ஐ.நா. ஒருங்கிணைப்பாளரிடம் இச்சந்திப்பின்போது தமிழ் மக்களின் பிரதிநிதிகளால் வலியுறுத்தப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது.




