மீண்டும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடத்துவதா, இல்லையா என்பது தொடர்பில் விரைவில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக மேலதிக விசாரணைகள் நடத்தப்படும்.
குறித்த விசாரணைகளின் உண்மைகளை கருத்திற்கொண்டு மீண்டும் புலமைப்பரிசில் பரீட்சை நடத்துவதா, இல்லையா என்பது தொடர்பில் விரைவில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும்.
எனினும் விசாரணைகளின் பின் நியாயமான தீர்வு வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ கூறுகையில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் கசிந்தமை தொடர்பான சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஒத்துழைப்புக்களை வழங்கியதாகக் கூறப்படும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சையில் 3 வினாக்கள் கசிந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் திணைக்கள பணிப்பாளர் எதிர்வரும் அக்டோபர் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.