திரெளபதி-2 படத்தை வெளியிட தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த மகாமுனி அம்பலகாரர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு 14-ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த மன்னன் வீர வல்லாள தேவன். இவரின் வாழ்க்கை வரலாறு அடிப்படையில் திரௌபதி-2 படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
வீர வல்லாள தேவன் என்பவர் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்கு பல கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள் உள்ளிட்ட வரலாற்று ஆவணங்கள் உள்ளன. ஆனால், திரெளபதி-2 படத்தில் வீர வல்லாள தேவனை வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவராக இயக்குநர் மோகன் சித்தரித்துள்ளார்.
திரைப்படத்தின் சுவரொட்டிகளில் வீர வல்லாள தேவன் என்பதை வீர வல்லாளன் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளனர். இது உள்நோக்கம் கொண்டது. மேலும், கள்ளர் சமூகத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தும். இதை கண்டித்து மேலூரில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், படத்துக்கு அவசர அவசரமாக ‘யு/ஏ’ சான்றிதழை தணிக்கை வாரியம் வழங்கியுள்ளது. யு/ஏ சான்றிதழை திரும்பப் பெறுமாறு தணிக்கை வாரியத்திடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.




