தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (22) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலையில் கொட்டாவயிலிருந்து மத்தள செல்லும் வீதியில், பாலடுவ மற்றும் கப்புதுவ ஆகிய இடைமாறல்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மத்தள நோக்கிப் பயணித்த பாரவூர்தியொன்று குறித்த இடைமாறல்களுக்கு இடைப்பட்ட பகுதியில், நெடுஞ்சாலை ஓரமாக கவனயீனமற்ற முறையில் தரிக்கப்பட்டிருந்த நிலையில், அதே திசையாக பயணித்த தாங்கி ஊர்தியொன்று குறித்த கொள்கலன் ஊர்தியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
சம்பவத்தில் பாரவூர்தியின் உதவியாளரான கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
அத்துடன், விபத்தில் படுகாயமடைந்த தாங்கி ஊர்தியின் சாரதியான 61 வயதுடைய நபர் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட வேளையில் உயிரிழந்துள்ளார்.
மேலும் தாங்கி ஊர்தியின் உதவியாளர் பலத்த காயமடைந்த நிலையில் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.