தேசிய ஒருமைப்பாட்டு குழுவொன்றை நிறுவுக – அரசாங்கத்தை வலியுறுத்துகிறார் சஜித்!

0
58

திருகோணமலை ஜயந்தி போதிராஜ விகாரையில் நடந்த சம்பவம் தேசிய பாதுகாப்புக்கு சாதகமானதா? பாதிப்பானதா? 1951ஆம் ஆண்டில் அந்த விகாரை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 2010 இல் பௌத்த விவகாரங்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2014 இல் புனித பூமிக்கான உரித்து கிடைத்துள்ளது. ஏதோவோரு பிரச்சினை உருவாகின்றது. அந்த பிரச்சினையில் புத்தர்சிலையை கொண்டு செல்லும் தரப்பாக பொலிஸார் மாற்றப்பட்டுள்ளனர். புத்தர் சிலையை அகற்றுவதற்கு பொலிஸாருக்கு உள்ள உரிமை என்ன? தவறை புரிந்துகொண்டு மீண்டும் அந்த புத்தர் சிலையை பிரதிஸ்டை செய்துள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வரவுசெலவுத் திட்டத்தின் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் இன்று (18) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

பௌத்த மதத்திற்கு வழங்கப்படும் முன்னுரிமை தொடர்பில் நாம் அனைவரும் அறிவோம். அதேபோன்று மற்றைய மதங்களுக்கு வழங்கப்படும் உரிய கௌரவம் மற்றும் இடம் என்பன வழங்கப்பட வேண்டும். இந்நிலையில் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் வகையில் தேசிய ஒருமைப்பாட்டு குழுவொன்றை அமைக்க வேண்டும். ஜனாதிபதி அதனை செயற்படுத்த வேண்டும். இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படும் போது இதனை பொலிஸாரிடம் ஒப்படைத்து பலனில்லை. நாட்டுத் தலைவர் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். இது சாதாரண பிரச்சினையல்ல என்பதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். ஏனைய மதங்களில் இது போன்ற பிரச்சினைகள் வரும் போதும் நாங்கள் இவ்வாறு செயற்பட்டோம். சிறந்த பௌத்தர்கள் போன்றே நடந்து கொண்டோம். ஆனால் தற்போது சில குழுக்கள் பௌத்த மதத்தை திரிபுப்படுத்துகின்றன. இந்த நிலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு நான் ஜனாதிபதிக்கு கூறுகின்றேன். ஜனாதிபதி தீயை உருவாக்கக் கூடாது. தீயை அணைப்பதற்கே நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்பு பிரிவினர் இதுபோன்ற விடயங்களில் தலையிடாது. நாட்டின் ஜனாதிபதி இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பிச் செல்லாத வகையில், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரர் உள்ளிட்ட மகாநாயக்க தேரர் மற்றும் இந்த பிரச்சினையில் தொடர்புபட்டுள்ள சகல குழுக்களையும் ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்து இந்த பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுங்கள். பிரச்சினையில் இருந்து நழுவிச் செல்வது தலைமைத்துவம் அல்ல. இதனை தீர்க்க வேண்டும். நாட்டில் பல இடங்களிலும் இவ்வாறான பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஆகவே இவற்றுக்கு முறையான தீர்ப்புகளை பெற்றுக் கொடுக்க வேண்டும். நாட்டின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை, உண்மையான மக்கள் இறையாண்மை, நாட்டின் சுதந்திரத்தை பலப்படுத்தும் சாதகமான செயற்பாடுகளுக்கு எதிர்க்கட்சி கூட ஒத்துழைப்பை வழங்க தயார். ஆனால் விகாரைகளுக்குள் சென்று செயற்படுவதற்கு பொலிஸாருக்கு உரிமை கிடையாது. இதனால் இந்தப் பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மத வழிபாட்டு இடங்களில் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படும் போது நாங்கள் தெளிவான நிலைப்பாடுகளிலேயே இருந்தோம். தீயை உருவாக்கமால் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய வகையில் நாம் செயற்பட்டுள்ளோம். அரசியலமைப்பின் பிரகாரம் செயற்படுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

🟩 தேர்தல் காலங்களில் இராணுவ வீரர்களுக்கான படையணிகளை உருவாக்கிய அரசாங்கம் இன்று அவர்களை கிடப்பில் போட்டுள்ளது.

நாட்டின் ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதில் முப்படைகள், பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படைகள் மகத்தான சேவைகளை ஆற்றியுள்ளன. இன்று, ஊனமுற்ற இராணுவ வீரர்கள் 3 பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவில், பொது நிர்வாக சுற்றறிக்கை 15/2025 மூலம் சகல அரச மற்றும் ஆயுதமேந்திய படை அதிகாரிகளின் ஓய்வூதியங்களை திருத்துவதற்கு முன்மொழியப்பட்டன. ஓய்வூதிய சுற்றறிக்கை இலக்கம் 2/2025, ஊடாக ஆயுமேந்திய முப்படைகளின் பொலிஸார் மற்றும் விசேட அதிரடைப் படையில் பணியாற்றுவோர் ஓய்வு பெற்ற பிறகும் 55 வயது வரை, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெறும் ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு, இறந்த அதிகாரியின் விதவைகளுக்கு ஓய்வூதியம் கிடைக்காது என சுற்றறிக்கை அனுப்பி வைத்து, பின்னர் அதனை திருத்தம் செய்துள்ளனர். வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், ஓய்வூதிய திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அது செல்லுபடியற்றது என்று அறிவித்து உத்தரவுகளை பிறப்பிக்கிறார். ஜனாதிபதியின் முன்மொழிவை பணிப்பாளர் நாயகம் எவ்வாறு நிராகரிக்க முடியும் என்ற விடயத்தில் பிரச்சினை காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி உரிமைகளை வழங்கும்போது, ​​பணிப்பாளர் நாயகம் குறித்த உரிமைகளை வெட்டுச் செய்கிறார். 2025 ஆம் ஆண்டு தீர்மானம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இந்த வெட்டு நடக்கக்கூடாது. இது உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும், இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் நிலையான கொடுப்பனவுகளைக் கூட அரசாங்கம் குறைத்துள்ளது. இதுபோன்ற அநீதிகளை இழைக்க வேண்டாம். சுனாமி, விமான விபத்துகள் போன்றவற்றால் காணாமல் போன பாதுகாப்புப் படையினருக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டிருந்தாலும், ஓய்வூதிய திணைக்கள பணிப்பாளர் இவற்றை இரத்துச் செய்துள்ளார். அவர்கள் திரும்பி வருவார்கள் என்ற அனுமானத்தின் அடிப்படையில் நிலையான கொடுப்பனவுகளை வழங்குவதில்லை என்ற தீர்மானத்திற்கு வந்துள்ளார். பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதியையும் விஞ்சி செயற்பட்டுள்ளார். இது நாட்டின் கொள்கைக்கு முரணாக அமைந்து காணப்படுகின்றன என்று தெரிவித்தார்.

ஊனமுற்ற இராணு வீரர்களின் பிரச்சினைகள் தொடர்பில் தற்போதைய ஆளும் தரப்பினர் எதிர்க்கட்சியில் இருந்தபோது அடிக்கடி பேசி குரல் கொடுத்தனர். இன்று ஆட்சிக்கு வந்த பிற்பாடு இவற்றை மறந்து செயற்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு இப்போதாவது நீதியை நிலைநாட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

🟩 போதைப்பொருள் ஒழிப்பைப் போலவே, இணையவழி கடன் மாபியாவையும் துடைத்தெறிய வேண்டும்.

போதைப்பொருள் வியாபாரம் ஒழிக்கப்படும் என்று பாதுகாப்புக்குப் பொறுப்பான அமைச்சர் அறிவித்துள்ளார். அந்த நேர்மறையான நடவடிக்கைகளை நாம் பாராட்டுகிறோம். இந்நடவடிக்கைகளை பாரபட்சமின்றி முன்னெடுக்க வேண்டும். இதனை வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

போதைப்பொருள் வியாபாரம் போலவே, இனையவழி கடன் மாபியாவும் மிக மோசமாக அதிகரித்து, நாட்டில் மக்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு இது வந்துள்ளது. சட்டவிரோத கடன் வழங்கும் செயல்முறை குறித்து இதற்கு முன்னரும் பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறோம். ஆனால் இதற்கு தெளிவான தீர்வு எதுவும் இல்லை. இதன் காரணமாக, அண்மையில் அத்தனகல்லை பி்ரதேசத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மெகா கேஷ் என்ற நிறுவனத்தின் மூலம் பெறப்பட்ட கடன் காரணமாகவே இந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிறுவனத்தில் இருந்து, இந்த இளம் பெண் பெற்ற கடனுக்கு வட்டி விகிதம் 500% ஆக காணப்பட்டுள்ளது. இவ்வாறு கடன் பெறுவதற்கு வறுமை அதிகரிப்பே காரணம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மெகாபின் லங்கா, வன் கெரடிட், ஆசாத் டெவலப்மென்ட், சூப்பர்மேன் போன்ற பல நிறுவனங்கள் நாடு முழுவதும் பரவி காணப்படுகின்றன. இந்த சட்டவிரோத நிறுவனங்களை இழுத்து மூட வேண்டும். இந்த சட்டவிரோத நிறுவனங்கள் மத்திய வங்கி கடிதம் போன்று போலியான கடிதங்களை எழுதி கடன் பெறுநர்களை மிரட்டி வருகின்றன. தவனை தொகை ஒரு நாள் தாமதமானால் கூட கடன் பெறுநர்களின் வேலை தளங்களுக்குச் சென்று மிரட்டல் விடுத்து வருகின்றனர். இந்த சட்டவிரோத நிறுவனங்களுக்கு எதிராக சட்டங்களை இயற்றுவதற்குத் தேவையான முழு ஆதரவையும் பெற்றுத் தருவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

🟩 டிசம்பர் மாதத்தில் இலங்கையர் தினத்தைக் கொண்டாடுவதற்காக ஒதுக்கப்பட்ட 3000 இலட்சம் ரூபாவை, நாட்டில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காக ஒதுக்குங்கள்.

டிசம்பர் 11, 12 மற்றும் 13 ஆகிய திகதிகள் இலங்கையர் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டிற்குள் ஒற்றுமை, சகோதரத்துவம், நல்லிணக்கம் மற்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கான வழிமுறைகளை பெற்றுக் கொடுப்பது இதன் நோக்கமாக காணப்படுகின்றன. இதற்காக 3000 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த 3000 இலட்சத்தை செலவிட 7 நாள் விலைமனு செயல்முறையும் கொண்டு வரப்பட்டுள்ளது. இலங்கையர் தினத்திற்காக ஒதுக்கப்பட்ட 3000 இலட்சம் ரூபாவை காணாமல் போனவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு பயன்படுத்துங்கள். நல்லிணக்க திட்டத்திற்கான நிதிசார் பக்க பலத்தை பெற்றுக் கொடுக்குமாறு இதனைப் பயன்படுத்துமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம். சகவாழ்வு பற்றிப் பேசும் அரசு, இந்த 3000 இலட்சத்தை வீணாக்காமல், நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க, தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்த, நல்லிணக்கத்தை ஏற்படுத்த பயன்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here