தேயிலைச் செடிகளை எமது தொழிலாளர்கள் தெய்வமாக ஏற்று வழிப்பட்ட காலம் சிறிது சிறிதாக அழிந்து வருவது வேதனையளிக்கின்றது என மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளர் க.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
எமது சமூகத்தவர்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களாக இருந்தாலும் கூட பாசத்தை வெளிக்காட்டுவதிலும் விசுவாசத்தை காப்பாற்றிக்கொள்வதிலும் ஒருபோதுமே பின்தங்கியவர்கள் அல்ல.
இதன்காரணமாகவே தமக்கு உணவு அளித்த தேயிலையை தெய்வமாகவே வழிப்பட்டார்கள்.
கவ்வாத்து வேலை முடிந்ததுடன் கவ்வாத்து சாமி என்று விழா எடுப்பார்கள்.
வசதியுள்ள இடங்களில் ஆடு வெட்டி விருந்து வைத்து வழிபடுவார்கள்.
இதுபோலவே பெண்கள் மட்டத்து சாமி என்று தெய்வ வழிப்பாட்டினை மேற்கொள்வார்கள். இதற்கு நிர்வாகங்களும் பங்களிப்பு செய்யும்.
இவ்வாறு எல்லாம் பக்தியோடு நேசிக்கப்பட்ட தேயிலை தொழிலை கைவிட்டு விட்டு வெளி இடங்களுக்கு வேலைத் தேடி சென்று வேலை செய்யும் அளவிற்கு இந்த துறையில் மக்கள் விரக்தியடைந்து விட்டார்கள்.
தான் நேசித்து வளர்த்தெடுக்கும் தன் குழந்தையை கல்விமானாக நல்லொழுக்கம் உள்ளவனாக பிற்காலத்தில் தமக்கு உதவுபவனாக வளர வேண்டும் என்று விரும்பும் தாய் அதே குழந்தை குடிகாரனாக, வழி தவறியவனாக , முரடனாக வளர்ந்து விட்டால் எப்படி வேதனையால் குமுறுவாளோ அதேபோல்தான் இன்றைய பெருந்தோட்டங்களின் நிலை.
தாம் அரும்புகளாக வளர்த்தெடுத்த தேயிலைச் செடிகள் இன்று காடுகளாகி விஷஜந்துக்களின் இருப்பிடமாக பொலிவிழந்து செழிப்பின்றி காடுகளாக மாறி வருவதை எம்மவர்கள் எப்படி தாங்கிக் கொள்வார்கள்.
இன்றுள்ள நிலையில் இன்னும் சில வருடங்களில் நாம் வளர்த்தெடுத்த தேயிலைச் செடிகளையே அபூர்வ செடிகளாக தூரத்திலிருந்து பார்க்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என தெரிவித்தார்.