தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியால் 19 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (17) மாலை 4.00 மணிக்கு பணிப் புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பமானது.
இந்நிலையில் இப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மத்திய தபால் பரிமாற்றத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் நேற்று நள்ளிரவு 12.00 மணிமுதல் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
இதனால், அனைத்து தபால் செயல்பாடுகளும் பாதிக்கப்படும் என ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த தபால்மா அதிபர் ருவன், சத்குமார, தபால் ஊழியர்களின் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டபோதும் இதுபோன்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது நியாயமற்றது எனக் கூறியுள்ளார்.
“3000 உப தபால் நிலையங்கள் உள்ளன. அவை பணி நிறுத்தத்தில் இல்லை.
இருப்பினும் தபால் பொருட்களை வழங்குவதில் சிறிது தாமதம் ஏற்படலாம். அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.
மீண்டும் பணிக்குத் திரும்ப தயாராக சிலர் இருப்பினும் அவர்களுக்கு அச்சுறுத்தல்கள் உள்ளன.
அதனால் அலுவலகத்துக்கு வருபவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி பொலிஸ்மா அதிபருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.
இதுபோன்ற செயல்கள் நடப்பின் நிச்சயமாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.