பெருந்தோட்ட கூட்டு ஒப்பந்த நிறைவுக்கான கால எல்லை நெருங்கிவரும் நிலையில் தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய விடயம் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது என ரோஸ் ஜனநாயக முன்னணியின் மலையக பிராந்திய
பொறுப்பாளர் இரா.ஜீவன் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
இறுதியாக 1000 ரூபா கோரிக்கையை முன்வைத்து முதலாளிமார் சம்மேளனத்துக்கும் கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கத்திற்கும் இடையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடாத்தி தோல்வியுற்ற நிலையில் வேலைநிறுத்த போராட்டத்திற்கு
அழைப்புவிடுத்தனர்.
எவ்வித பேதமுமின்றி சகல தொழிற்சங்கங்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தொழிலாளர்கள் சுயமாக பாரிய போராட்டங்களை முன்னெடுத்தனர் எப்போதும் இல்லாதவகையில் ஏனைய தொழிற்துறையை சேர்ந்தவர்கள் சிங்கள மக்கள் வடகிழக்கு தமிழர்கள் இளைஞர்கள் என சகல தரப்பினரும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக
களமிறங்கினர். தொழிலாளர்களும் தங்களுக்கு நியாயமான சம்பளவு உயர்வொன்று கிடைக்கும் வரை போராடவும் தயாராகவிருந்தனர்.
வலுவான போராட்டமொன்று நடந்துக்கொண்டிருந்த நிலையில் வெறும் 50 ரூபா அடிப்படை சம்பள உயர்வோடு
கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 1000 ரூபா சம்பள கோரிக்கை காற்றில் பறக்கவிடப்பட்டதோடு தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைப் பணமும் தாரைவார்க்கப்பட்டன. கூட்டு ஒப்பந்தத்தில் பல முற்போக்கான விடயங்கள்
உள்ளடக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது ஆனால் இந்த ஒப்பந்த திட்டம் நடைமுறைக்கு வந்ததன் பின்னர் பல்வேறு சலுகைகளும் உரிமைகளும் இல்லாமாக்கப்பட்டதோடு ஒரு முறையேனும் திருப்திகரமான சம்பளவுயர்வொன்றை
பெற்றுக்கொண்டதாக வரலாறு இல்லையென்று தொழிலாளர்கள் விசனமடைந்துள்ளனர்.
சம்பளவுயர்வு கோரிக்கையை முன்வைக்கும் போதும் அல்லது சம்பளத்தை தீர்மானித்து ஒப்பந்தத்தில் கையொப்பமிடும்போதும் தொழிலாளர்களிடம் கலந்துரையாடியோ அல்லது அவர்களின் விருப்பு வெறுப்புகளை கருத்திற்கொண்டோ இல்லாமல்ரூபவ்
உழைப்பவனின் சம்பளத்தை கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனுமே தீர்மானிக்கின்றது இது வருந்தத்தக்க விடயமாகும் நடந்து முடிந்த மேதினக் கூட்டத்தில் மலையகத்தின் இரண்டு
பிரதான தொழிற்சங்க அரசியல் கட்சிகளான தமிழ் முற்போக்கு கூட்டணியும் கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் பிரதான தரப்பான இலங்கை தொழிலாளர் காங்கிரசும் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் பெற்றுத்தரப்படும்
என்ற நம்பிக்கையை தரக்கூடிய கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள்.
ஆகவே இந்த முறை சம்பள கோரிக்கையை முன் வைக்க முன்னர் தொழிலாளர்களோடும் கலந்துரையாடி
உழைப்புக்கேற்ற ஊதிய கோரிக்கையொன்றை முன்வைக்கவேண்டும். பேச்சுவார்த்தை வெளிப்படையாக நடத்தப்படவேண்டும் பேச்சுவார்த்தை மேசையில் தொழிலாளர்களை பிரதிநித்துவப்படுத்தும் சகல தொழிற்சங்கங்களையும் இணைத்துக்கொள்ளவேண்டும் ஒவ்வொரு தொழிற்சங்கமும் பேச்சுவார்த்தைக்கான குழுவில் குறைந்தது இரண்டு
தொழிலாளர்களை இணைத்துக்கொள்ளவேண்டும்.
இதற்கு கூட்டு ஒப்பந்தம் தடையாக இருந்தால் கூட்டு ஒப்பந்த சரத்துகள் திருத்தப்படவேண்டும் தற்போதைய தேயிலை விலையேற்றத்தையும் கருத்திற்கொண்டு நியாயமான சம்பளவுயர்வை பெற்றுக்கொடுப்பதோடு கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகளையும் உரிமைகளையும் அனுபவிப்பதற்கும் சம்பந்தப்பட்டவர்கள் வகை செய்யவேண்டும் என்று
தெரிவித்துள்ளார்.
தலவாக்கலை பி.கேதீஸ்