தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1200 ஆக்க வேண்டும்; அல்லது சந்தாவை நிறுத்த வேண்டும்- விக்னேஸ்வரனின் அதிரடி அறிவிப்பு!!

0
203

தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளமாக 1000 ரூபா அல்ல, 1200 ரூபா வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார் வடக்கு முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர் நாயகமுமான க.வி.விக்னேஸ்வரன்.

அவரது வாராந்த கேள்வி பதிலிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களின் சம்பள கோரிக்கையை நிறைவேற்றுவதில் மலையக அரசியல் கட்சிகளிடம் ஒன்றுபட்ட தன்மையில்லையென விமர்சித்துள்ள விக்னேஸ்வரன், நாளாந்த சம்பளம் அதிகரிக்காமல் விட்டால் சந்தாப்பணத்தை தொழிலாளர்கள் நிறுத்துவதே சிறந்த வழியென்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவரது ஊடகப்பிரிவால் அனுப்பி வைக்கப்பட்ட கேள்வி பதில் வருமாறு-

கேள்வி:- நீங்கள் வடகிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் நலன் பற்றி மட்டும் பேசி வருகின்றீர்கள். மலையகத் தமிழர்களும் எங்களைச் சேர்ந்தவர்களே என்று மேடைகளில் பேசுகின்றீர்கள். ஆனால் அவர்கள் நலம் பற்றி எதுவுமே கூறுவதில்லை. தோட்டத் தொழிலாளர்களுக்கு இதுவரையில் எந்த வித மேலதிகக் கொடுப்பனவும் கொடுக்கப்படவில்லை. அதுபற்றி உங்கள் கருத்தைத் தெரிவிப்பீர்களா?

பதில்: எங்கள் தமிழ் மக்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்களுக்கு ஒரு குறைபாடு உண்டு. அவர்கள் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். இலங்கையைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். வேறெந்த நாட்டைச் சேர்ந்தவராகக் கூட இருக்கலாம். தம்முடைய மக்கள் மத்தியில் “தான்” என்ற மமதை கொண்டவர்கள் அவர்கள். இன்னொரு தமிழன் மேலெழுவதை ஒரு தமிழன் விரும்ப மாட்டான்.

தனக்கில்லாததெது மற்றவனிடம் இருக்கின்றது என்றே சிந்திப்பான். தன்னிலும் பார்க்க மற்றவரிடம் சிறப்பம்சங்கள் இருந்தால் அவற்றை மட்டந் தட்டப் பார்ப்பான். ஏதாவது கூறி அடுத்தவன் மேலெழுவதைத் தடுக்கப் பார்ப்பான். தமிழர் வாழும் எந்த இடம் சென்றாலும் இவ்வாறான செயற்பாடுகளை நாம் காணலாம். மடகஸ்காருக்குப் பக்கத்தில் மீள் ஐக்கியத் தீவுகள் என்று ஒரு சிறு தீவு உண்டு. Reunion Island என்று அதை அழைப்பார்கள். அங்கு வாழும் தமிழர்கள் எந்தப் பேதமுமின்றி, எரிச்சல் புகைச்சல் இன்றி, பொறாமை இன்றி வாழ்வதாகக் கூறுகின்றார்கள். ஒரு வேளை அத்தீவு மட்டும் விதிவிலக்கோ நான் அறியேன்.

கேள்வி ஏதோ ஒன்றாக இருக்க நீங்கள் வேறு விடயங்களைப் பற்றிப் பேசுகின்றீர்களே என்று நீங்கள் எண்ணக்கூடும். என் இதுவரையான கூற்றில் உங்கள் கேள்விக்குச் சம்பந்தமிருக்கின்றது. அதாவது மலையக மக்களின் சகல கட்சிகளும் தொழிற்சங்கங்களும் அவற்றின் தலைமைத்துவங்களும் சேர்ந்து தம் மக்களின் ரூ.1000/= கோரிக்கை பற்றி பொதுவான, ஐக்கியமான ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார்களா? தமக்குள் எந்தப் பேதமுமின்றி கோரியுள்ளார்களா? தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூபா 1000/= நாட் கூலியாகக் கிடைக்க வேண்டும் என்பதிலும் பார்க்க யார் அதனைப் பெற்றுக் கொடுக்கப் போகின்றார்கள் என்பதிலேயே தோட்டத் தொழிலாளர்களின் தலைமைகள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள் போல் எனக்குத் தெரிகின்றது.

இன்று யாழ்ப்பாணத்தில் ரூபா 1200/= நாட் கூலிக்குக் குறைவாக ஒருவரை எடுக்க முடியாது. அதுவும் அவர்கள் வேலை செய்வது காலை மற்றும் மதிய தேநீர் நேரத்தையும் பகல் போசன வேளையையும் முன்னிலைப்படுத்தியே. நல்ல வேலை செய்தால்க்கூட குறைவான வேலையையே செய்வார்கள். இழுத்தடிப்பார்கள். ஆனால் ரூபா 1200/= க்குக் குறைய ஒருவரை எடுப்பது கடினம். தோட்டத் தொழிலாளர்கள் அதிகாலை எழுந்து, பனியில் நனைந்து, பலவித ஜந்துக்களால் தாக்கப்பட்டு, குறிப்பிட்ட அளவு கொழுந்துகளையேனும் பறிக்கவேண்டிய கடப்பாட்டுக்குக் கட்டுப்பட்டு அவற்றைப் பறிப்பதும் அவற்றைக் கொண்டு சென்று ஆலையில் சேர்ப்பதுமாக முழு நாழும் வேலையில் ஈடுபடுகின்றார்கள்.

மாதம் ஒரு குறிப்பட்ட அளவு நாட்கள் வேலை செய்தால் இவ்வளவு சம்பளம், இல்லையேல் குறைந்த சம்பளம் என்று இருக்கின்றது. முழுச் சம்பளம் தொழிலாளர்களுக்குக் கிடைக்காது இருப்பதற்கு தோட்ட நிர்வாகம் வேலை செய்ய வேண்டிய நாட்களைக் குறைத்து விடுவார்கள். இதையும் ஏற்று அவர்களுக்கு தற்போது கிடைக்கும் ஒரு நாட் சம்பளத்தை வைத்து பலவற்றையும் சமாளிக்க வேண்டியுள்ளது. குழந்தைகளைப் பள்ளிக் கூடம் அனுப்புவது, நோயுற்ற குடும்பத்தவரைப் பராமரிப்பது, மேலெழும் வாழ்க்கைச் செலவுகளைச் சமாளித்து குடும்பத்தைப் பராமரிப்பது என்று பலவித செலவுகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

அவர்கள் சம்பளத்தில் ஒரு தொகை தொழிற்சங்கங்களுக்கு சந்தாப் பணமாக கட்டப்படுகிறது. எனினும் தொழிலாளர்கள் கண்ட மிச்சம் அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு கட்சிகளும் தொழிற்சங்கங்களும் தமது ஆணவப் போர்களில் ஈடுபட்டுக் கொண்டு வருகின்றார்கள். அரசியல் முரண்பாடுகளில் உழன்று கொண்டு இருக்கின்றார்கள். மலையகக் கட்சிகள் பலவற்றின் தலைவர்கள் என் அன்புக்குரியவர்கள். ஆனால் அவர்களின் ஒற்றுமையற்ற செயற்பாடுகள் என் மனதை வருத்துகின்றது.

சகல கட்சிகளின் தலைவர்களும் ஒன்று சேர்ந்து தமது மக்கள் நலத்தை முன்னிட்டு தோட்ட முதலாளிமார்களுடனும் அரசாங்கப் பிரதிநிதிகளுடனும் பேச வேண்டும். அல்லது எல்லோரும் சேர்ந்து ஒரு சிரேஸ்ட சட்டத்தரணியைப் பேச விட வேண்டும். பேச முதல் கடந்த பத்து வருட தோட்டக் கணக்குகளை எம்மவர் மிக நுணுக்கமாகப் பரிசீலிக்க வேண்டும். உண்மையில் அவர்கள் ரூபா 1000/= நாட் சம்பளத்தைக் கொடுக்க முடியாத நிலையில் உள்ளார்களா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

எனக்குத் தெரிந்த வரையில் கணக்குகள் கரவாகத் தயாரிக்கப்படுகின்றன. செலவுகளைப் பெருப்பித்து தொழிலாளர்களுக்குக் கொடுக்கப் பணமில்லை என்று கூறப்படுகிறது என்றே நம்பவேண்டியதாய் உள்ளது. மலையகத் தமிழர்களுக்கு உண்மையில் நாளாந்தம் ரூ 1200/= ஆவது கொடுக்க வேண்டும். உண்மையில் கொடுப்பனவு செய்ய முதலாளிமாருக்குப் பணம் குறைவென்றால் அரசாங்கம் தலையிட்டு நிதியுதவிசெய்ய வேண்டும். நாட்டின் மொத்த வருமானத்திற்குப் பங்களிப்பவர்கள் தோட்டத் தொழிலாளர்கள். அவர்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தி தோட்டங்களின் பராமரிப்பை விருத்தி செய்ய அரசாங்கம் முன்வர வேண்டும்.

எமது தொழிற்சங்கத் தலைவர்கள், கட்சித் தலைவர்கள் ஆகியோர் தமது தொழிற் சங்கங்களையும், கட்சிகளையும் முன்னேற்றுவதை மட்டும் பார்க்காமல் தோட்டத் தொழிலாளர்களின் நலனில் உண்மையான அக்கறை எடுக்க முன்வர வேண்டும். இல்லையேல் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களுக்குச் சந்தாப்பணம் தாம் கட்டவேண்டிய அவசியமில்லை என்று அந்தப் பணத்தைத் தமது மாதாந்தச் செலவுகளுக்குப் பாவிக்க நேரிடும். இவ்வாறான ஒரு கோரிக்கை தற்போது கட்சிகள், தொழிற்சங்கங்கள் முன்னிலையில் முன்வைக்கப்பட்டுள்ளது என்று அறிகின்றேன்.

மலையகத் தொழிற்சங்கங்கள், கட்சிகள் ஆகியன தமது தொழிலாளர்கள் நாளாந்தம் படும் பாட்டை சித்திரித்துக் காட்ட வேண்டும். குறும் படங்கள் போன்றவை தயாரித்து அரசாங்கத்தினருக்கும் எம்மிடம் தேயிலை வாங்கும் நாட்டு மக்களுக்கும் அந்த நாடுகளின் அரசாங்கத்தினருக்கும் போட்டுக் காட்ட வேண்டும். வெறும் தேயிலை விற்பனைப் பிரசாரமாக அமையாது அவை மக்களின் நாளாந்த அல்லல்களை எடுத்துக் காட்டுவதாய் அமைய வேண்டும். இவ்வாறான இன்னல்களில், இடர்களில் சிக்கி வாழும் எமது மக்களுக்கு நாளொன்றுக்கு ரூ1000/= போதுமா என்ற கேள்விக்குப் பதில் கோர வேண்டும்.

இப்பொழுது உங்கள் கேள்விக்கு வருகின்றேன். வடகிழக்கு மாகாண மக்களின் குறைகள் அடிப்படையில் அரசியல் சார்ந்தது; உரிமைகள் சார்ந்தது; உரித்துக்கள் சார்ந்தது. அதற்காகப் பொருளாதாரம் சார்ந்ததில்லை என்று கூறவரவில்லை. ஆனால் மலையகத் தமிழ் மக்களின் குறைகள் பெரும்பாலும் பொருளாதாரமே சார்ந்தது.

வடகிழக்கு மாகாண மக்களின் உரிமைகள் கோரி பயணிப்பது ஒரு பாதை. மலையக மக்களின் பொருளாதார விருத்தி நோக்கிப் பயணிப்பது பிறிதொரு பாதை. ஆகவே மலையக மக்கள் மீது எமக்குக் கரிசனை இல்லை என்று கூறமுடியாது. தேவை ஏற்படும் போது எமது கருத்துக்களை இது போல் பகிர்ந்து கொள்வோம். மலையகத் தொழிலாளர்கள் சார்பில் குரல் கொடுக்க நாம் தயாராக உள்ளோம். ஆனால் குரல் கொடுத்தால் மலையகக் கட்சித் தலைவர்களும் தொழிற் சங்கத் தலைவர்களும் கூறுவார்கள் “உமக்கேன் இவ்வளவு கரிசனை?” என்று. “விக்னேஸ்வரன் மலையகத் தமிழ் மக்களின் விடயங்களில் அநாவசியமாக உள்ளிடுகின்றார். அவர் மலையகத்தில் தமது கட்சியைப் பிரபல்யப்படுத்தப் பார்க்கின்றாரோ” என்றெல்லாம் கேள்விகள் எழுப்புவார்கள். இதனால்த்தான் நாங்கள் எங்கள் கருத்துக்களை வெளியிடாது அவர்கள் மீது அனுதாபத்துடன் பயணிக்கின்றோம்.

ஒரு சில விடயங்களை நான் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. வருங்காலத்தில் தோட்டத் தமிழ்த் தொழிலாளர்கள் தொடர்ந்து கொழுந்து பறிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது மடத்தனமானது என்று நான் கருதுகின்றேன். இளைய தலைமுறையினர் படித்து முன்னேறத் தலைப்பட்டுள்ளார்கள். தோட்டத் தொழிலாளர்களின் தற்போதைய சம்பளம் மற்றவர்களை ஈர்க்காதது அவர்கள் வேறு தொழில்களை நாடிச் செல்ல ஒரு காரணம் எனலாம். சொகுசு வாழ்க்கையை எமது இளம் சந்ததியினர் நாடுவது மற்றொரு காரணம் எனலாம். தொடர்ந்து தோட்டத் தொழிலாளர்களை வறுமையின் விளிம்பில் வைத்திருந்து வருவது எத்தகைய எதிர்காலப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அத்துடன் தற்போது தோட்ட நிர்வாகத்தினர் நீண்டகாலத் திட்டங்களுக்கு அமைய நடக்காது கிடைத்ததைச் சுருட்டிக்கொள்ளத் தலைப்படுகின்றார்கள் என்று கேள்விப்படுகின்றோம். தேயிலைக்குப் பதில் வேறு பயிர்ச்செய்கைகளில் நாட்டம் காட்ட முன்வந்திருப்பதும் தெரிய வருகின்றது. தோட்டத் தொழிலாளரின் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் நீண்டகால திட்டங்களைத் தீட்டி மக்கள் நலம் கருதி நடந்து கொள்வது அவசியம். எமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பளித்துள்ளீர்கள். உங்கள் கேள்விக்கு நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here