தேயிலை உற்பத்தி அதிகரிக்கப்படாத பட்சத்தில் சம்பளத்தை அதிகரிப்பது சிரமம் என முதலாளிமார் சம்மேளனத்தின் பேச்சாளர், ரொஷான் இராஜதுரை தெரிவித்தார்.
தொழிலாளர்கள் தொழிலுக்குச் சென்று நான்கு அல்லது ஐந்து மணித்தியாலங்களில் முப்பது கிலோகிராமுக்கும் அதிகமாக கொழுந்து பறிக்க முடியும் என்பதை நாம் நன்கு அறிவோம்.
அதற்குரிய கடந்த கால தரவுகள் எம்மிடம் உள்ளன. தேயிலை உற்பத்தி அதிகரிக்கப்படாத பட்சத்தில் சம்பளத்தை அதிகரிப்பது சிரமம் என முதலாளிமார் சம்மேளனத்தின் பேச்சாளர், ரொஷான் இராஜதுரை தெரிவித்தார்.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையிலுள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகமான சம்பளத்தை வழங்குவதாக தெரிவித்த முதலாளிமார் சம்மேளனம்,
தேயிலையின் உற்பத்தி அதிகரிக்கப்படாமல் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்த முடியாத நிலை காணப்படுவதாக அறிவித்துள்ளது.
இலங்கையின் தேயிலைத் தொழிற்றுறையின் நிலைமை குறித்து கலந்துரையாடும் நோக்கில் பெருந்தோட்ட கைத்தோழில் மற்றும் ஏனைய சங்கங்களுடன் இணைந்து முதலாளிமார் சம்மேளனம் கொழும்பு 03 இல் அமைந்துள்ள தேயிலை சபையின் கேட்போர் கூடத்தில் அண்மையில் செய்தியாளர் சந்திப்பை நடத்தியது.
இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த முதலாளிமார் சம்மேளனத்தின் பேச்சாளர், ரொஷான் இராஜதுரை, சம்பள விடயம் தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெரிவித்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் போதியதாக இல்லை. ஆதலால், நாளாந்த சம்பளம் இரண்டாயிரத்து 500 ரூபாவுக்கும் அதிகமாக வழங்கப்படவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
அரசாங்கம் என்ற ரீதியில் உங்களுடைய நிலைப்பாடு என்னவென இதன்போது கலந்துகொண்டிருந்த பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிடமும் ரொஷான் இராஜதுரையிடமும் ஒரே நேரத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், ‘இந்த நாட்டிலுள்ள மக்களின் வாழ்க்கை முறை சிறப்பாக இருப்பதை நாம் விரும்புகிறோம். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் எமக்கு எந்த எதிர்ப்பும் கிடையாது. எனினும் அதன் இருபக்கத்தையும் நோக்க வேண்டும்.
இந்த நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கிக்கொண்டு சம்பளத்தை அதிகரிக்க முடியாது. அவை இலாபத்தில் இயங்கினால் சம்பளத்தை அதிகரிக்குமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
இதேவேளை, முதலாளிமார் சம்மேளனத்தின் சார்பில் கருத்து வெளியிட்ட ரொஷான் இராஜதுரை, நாம் முகாமைத்துவம் என்ற ரீதியில் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு விரும்புகிறோம். எனினும் யதார்த்தம் என்ன? சம்பளம் உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகளை எமக்குக் கிடைக்கும் இலாபத்தின் அடிப்படையிலேயே உயர்த்த முடியும். அதனை நாம் நிரூபித்திருக்கிறோம்.
நாம் பெருந்தோட்டங்களை பொறுப்பேற்கும்போது 68 ரூபா சம்பளமே வழங்கப்பட்டது. ஆயினும் தற்போது சம்பளம் 21 மடங்கால் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனபோதும் உலக சந்தையில் தேயிலைக்குக் கிடைக்கும் விலை 08 மடங்கால் அதிகரித்துள்ளது.
நாம் ஏன் எப்போதும் சம்பளத்தைப் பற்றி மாத்திரம் பேச வேண்டும்? வெளியார் உற்பத்தி முறைமை பற்றி நாம் ஏற்கனவே பேசியிருந்தோம். அந்த முறையின் கீழ் 50 ஆயிரம் ரூபாவுக்கும் அதிமான தொகையை தொழிலாளர்கள் சம்பளமாக பெற்று வருகிறார்கள். உற்பத்தி அதிகரிப்புக்கேற்ப அவர்கள் சம்பளம் அதிகமாக பெறுகிறார்கள்.
இந்த நாட்டில் 150 வருடங்களுக்கு மேலாக வரவின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுவது மாற்றப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.




