வாக்குகளைப்பெற்றுக்கொள்வதற்காக மக்களை ஏமாற்றி பொய்வாக்குறுதிகளை வழங்குபவர்களுக்கு இனிமேல் இடமில்லை. ஏமாற்று காரர்களை நம்பப்போவதில்லை . இன்று புதன்கிழமை இடம் பெறவுள்ள ஜனாதிபதியுடனான பேச்சு வார்த்தையில் நிரந்தர தீர்வு கிடைக்கப்பெறாவிட்டால் தொடர்ச்சியாக உண்ணாவிரதத்தை முன்னெடுப்போம் என மலையக இளைஞர்கள் எச்சரித்துள்ளனர்.
தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வை வழங்கக்கோரி கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக மலையக இளைஞர்கள் நேற்று ஆரம்பித்த உண்ணாவிரதப்போராட்டம் ஒரு நாள் இரவு கடந்து இன்றும்(19) தொடர்கின்றது.
இங்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.
இன்று மலையக பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமையவேண்டும். மாறாக சம்பள உயர்வுப் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாவிட்டால் ஒட்டுமொத்த மலையக இளைஞர்களையும் கொழும்புக்கு அணிதிரட்டி தொடர் உண்ணாவிரதப்போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் குறிப்பிட்டனர்.
இது தொடர்பில் உண்ணாவிரதப்|போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் உதயன் என்பவர் குறிப்பிடுகையில் ,
கூட்டு ஒப்பந்தத்தினூடாக சம்பள உயர்வைப்பெற்றுத்தருவதாகக்கோரி எமது தாய் தந்தை உறவுகள் ஏமாற்றப்பட்டுள்ளனர். சம்பள உயர்வைப்பெற்றுத்தருவதாக மலையக தலைமைகள் எமது உறவுகளுக்கு வாக்குறுதிகளை அள்ளி குவித்தனர்.
அதற்கமைய எமது வாக்குகளையும் பெற்றுச்சென்றனர். இவ்வாறாக வாக்குறுதிகளுக்கமைய மலையக மக்களின் ஆணையுடாக ஆட்சிக்கு வந்தனர்.
தொழிலாளர்களின் சம்பளம் உயர்வு தொடர்பில் பாராமுகமாக செயற்படாமல் மலையக அரசியல் தலைவர்கள் உடனடியாக தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
அண்மைக்காலமாக தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வைக்கோரி பல்வேறு வகையான போராட்டங்கள் நாடலாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன..இருந்த போதிலும் அவர்களின் சம்பளம் உயர்வு தொடர்பில் எவ்வித முன்னேற்றமும் இடம் பெறாமையைக் காணக்கூடியதாகவுள்ளது.
இவ்வாறாக சம்பள உயர்வு தொடர்பாக இன்று மலையக அரசியல் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்குமான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது . இந்த சந்திப்பில் எமது மலையக உறவுகளுக்கு ஏற்பட்டிருக்கும் சம்பள உயர்வு குறித்த பிரச்சினைக்கு தகுந்த தீர்வு கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கின்றோம் .
அவ்வாறாக இந்த சந்திப்பின் போது தகுந்த தீர்வு கிடைக்காத பட்சத்தில் ஒட்டுமொத்த மலையக இளைஞர்களும் ஒன்றிணைந்து 1000 ரூபாய் சம்பள உயர்வு கிடைக்கப்பெறும் வரையில் தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் எச்சரித்தனர்.