இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து தனியார் வர்த்தகர்கள் பொருட்களை பதுக்கியும், தன்னிச்சியான விலையிலும் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள் நாட்டில் உள்ள மக்கள் மாத்திரமின்றி மலையக மக்களும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்கள்.
இதன் காரணமாக அரசாங்கம் நிர்னைய விலையில் பொருட்களை சத்தோச ஊடாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் தோட்ட மக்களை பொருத்த வரையில் ஒரு சில பிரதேசங்களிலேயே சத்தோச மூலம் பொருட்களை கொள்வனவு செய்யக்கூடிய நிலை காணப்படுகின்றது. ஆகவே மக்களின் நலன்கருதி மலையகத்தில் உள்ள சகல பிரதான நகரங்களிலும் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஊடாக சத்தோச கிளை ஒன்றினை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் உப செயலாளர் சச்சிதா நந்தன் தெரிவித்தார்.இன்று (03) அக்கரபத்தனை மன்ராசி பகுதியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…..
மலையகத்தில் தனியார் விற்பனையில் ஈடுபடும் ஒரு சில வர்த்தகர்கள் அத்தியவசிய பொருட்களை பாரிய அளவில் விலையினை ஒன்றுக்கு இரண்டாக உயர்த்தி விற்பனை செய்கிறார்கள். இதனால் அவர்கள் அதிக லாபம் பெறுகிறார்கள் ஆனால் கொள்வனவு செய்யும் தோட்டத்தொழிலாளர்கள் மிகவும் சிரமமப்படுகிறார்கள். இது மலையகத்தில் மட்டுமன்றி நாடாளவிய ரீதியில் நடைபெற்று வருகிறது.
எனவே அரசாங்கம் இன்று சத்தோச ஊடாக நிர்னைய விலையில் பொருட்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
ஆனால் இன்று மலையகத்தில் இது பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது காரணம் தோட்டத்தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வீட்டுக்கு வந்து பல கிலோ மீற்றார் தூரம் சென்று பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டும் குறிப்பாக உடரத்த பகுதியில் உள்ள ஒருவர் சத்தோசவில் கொள்வனவு செய்வதற்கு உடரத்தவிலிருந்து நுவரெலியாவுக்கு வரவேண்டும் இந்நிலையில் தான் சத்தோச கிளைகளை தோட்டங்களுக்கு அண்மையில் உள்ள நகரங்களில் நிறுவ வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைத்தோம். கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் மலையகத்தில் ஒரு சத்தோச கூட ஏற்படுத்த முடியவில்லை என தெரிவித்தார். ஆனால் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மன்ராசி பகுதியில் சத்தோச கிளை ஒன்றினை ஏற்படுத்தி கொடுத்து இன்று அந்த கிளை ஊடாக பாரிய அளவில் சேவைகள் நடைபெற்று வருகின்றன.
இன்றும் கூட டயகம ஈஸ்ட் பகுதியிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மன்ராசி சத்தோச கிளைக்கு கரடுமுரடான பாதைகளை கடந்து வந்து பொருட்களை பெற்று செல்கிறார்கள். இதனை டயகம பகுதியில் ஒரு கிளை ஏற்படுத்தினால் அவர்கள் மிகவும் இளகுவாக தங்களுக்கு தேவையான பொருட்களை நியாய விலையில் பெற்றுக்கொள்வார்கள், எனவே டயகம, பொகவந்தலா, நானுஓயா, உள்ளிட்ட மலையகத்தில் உள்ள பிரதான நகரங்களில் சத்தோச கிளைகளை ஏற்படுத்த ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.