சென்னை வீரர் மகேந்திர சிங் தோனிக்கு 10 இலட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில், மகேந்திர சிங் தோனிக்கும் தொடர்பு இருப்பதாக, ஓய்வுப் பெற்ற உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர், தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.
இது தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி, நூறு கோடி ரூபாய் நட்டஈடு கோரி குறித்த அதிகாரிக்கு எதிராக தோனி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
கடந்த 2014-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் தொடர்புடைய இறுவட்டை எழுத்து வடிவமாக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு தொடர்பான இறுவட்டை எழுத்துவடிவமாக்க மொழி பெயர்ப்பாளரும், தட்டச்சாளரும் முழு நேரத்தை ஒதுக்க வேண்டியுள்ளது.
இதற்கு மூன்று முதல் நான்கு மாதங்களாகும்.
மொழியாக்கம் செய்யப்படும் ஆவணங்களை பிரதி எடுக்க கூடுதல் செலவினம் ஏற்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், மொழியாக்கத்துக்கான கட்டணமாக 10 இலட்சம் ரூபாயை தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு மார்ச் 12 ஆம் திகதிக்குள் செலுத்த வேண்டும் என மனுதாரரான தோனிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
அதேநேரம், மொழியாக்க பணிகளை மார்ச் 3 ஆவது வாரத்துக்குள் முடிக்க வேண்டும் என மொழிபெயர்ப்பாளர், தட்டச்சாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 12 ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.




