நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்சபான தோட்ட கீழ் பிரிவில் இறந்த நிலையில் கருஞ்சிறுத்தை ஒன்று இன்று (29) மீட்கப்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
லக்சபான தோட்ட கீழ் பிரிவு தோட்ட தொழிலாளர்கள் இன்று காலை பணிக்கு சென்ற வேளையில் உயிரிழந்த நிலையில் கருப்பு நிற சிறுத்தையொன்று கிடப்பதை கண்ட தொழிலாளர்கள் தோட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.
தோட்ட அதிகாரி இதுகுறித்து நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த நிலையில் கிடந்த கருஞ் சிறுத்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ரந்தெனிகல வனவிலங்கு வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த சிறுத்தை உயிரிழந்தமைக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.




