ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, உயர் ஸ்தானிகர் வோல்கர் டேர்க் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை சந்தித்ததுடன், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர ஆகியோருடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொண்டார். பாராளுமன்ற சபாநாயகர், பிரதம நீதியரசர் மற்றும் பல அரசாங்க பிரதிநிதிகளையும் அவர் சந்தித்தார்.
இலங்கையில் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டேர்க் தங்கியிருந்த நாட்களில், பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் உள்ளிட்ட மனித உரிமைகளை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகள், தேசிய நல்லிணக்க செயல்முறைகளை வலுப்படுத்துதல் மற்றும் சமூக நீதியை உறுதி செய்தல் குறித்து கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்பட்டன.
கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் கண்டி ஆகிய இடங்களுக்கு விஜயங்களை மேற்கொண்டிருந்த ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டேர்க், மதத் தலைவர்கள், அரசியல் கட்சிகள், சிவில் சமூகத்தினர் மற்றும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், பாதிக்கப்பட்ட மக்கள் உட்பட பலரையும் உயர் ஸ்தானிகர் சந்தித்தார்.
யாழ்ப்பாணத்தில், நல்லூர் கோவிலுக்குச் சென்று சமய வழிபாடுகளில் பங்கேற்றார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றபோது, உயர் ஸ்தானிகர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி மனித புதைகுழி பகுதியையும் பார்வையிட்டதுடன் அணையா விழக்கு போராட்டக்களத்திற்கும் சென்றிருந்தார்
இலங்கைக்கான வருகைக்கு வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்காக இலங்கை அரசாங்கத்திற்கு உயர் ஸ்தானிகர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார், மேலும் தனது அலுவலகத்துடனான இலங்கையின் தொடர்ச்சியான ஆக்கபூர்வமான ஈடுபாட்டைப் பாராட்டினார்.
2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துக்கு பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொண்ட முதல் விஜயம் இதுவாகும்.