ஐக்கிய நாடுகள் சபை நிதி வீழ்ச்சியைச் சந்திக்கும் அபாயத்தில் உள்ளதாக அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார்.
பல உறுப்பு நாடுகள் தமது கட்டாயப் பங்களிப்புத் தொகையைச் செலுத்தத் தவறியமையே இந்நிலைமைக்குக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதி நெருக்கடி தீவிரமடைந்து வருவதுடன், இது ஐக்கிய நாடுகள் சபையின் திட்டங்களைச் செயற்படுத்துவதில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் குட்டெரெஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய நிலை தொடருமானால், எதிர்வரும் ஜூலை மாதமளவில் அமைப்புக்கு நிதித் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
193 உறுப்பு நாடுகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், சம்பந்தப்பட்ட நாடுகள் தமக்குரிய கட்டாயப் பங்களிப்புத் தொகையை உடனடியாகச் செலுத்த வேண்டும் அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் நிதி விதிகள் மற்றும் நடைமுறைகளைத் திருத்துவதற்கு இணங்க வேண்டும் எனவும் பொதுச்செயலாளர் குட்டெரெஸ் அறிவித்துள்ளார்.
இல்லையெனில், ஐக்கிய நாடுகள் சபையின் ஒட்டுமொத்த செயற்பாடுகளும் முடங்கும் கடும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.




