நுவரெலியா – இராகலை நகரில் இன்று (06.05.2022) அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இராகலை நகரை சுற்றியுள்ள 10 தோட்டங்களை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள், வலப்பனை கல்வி வலய அதிபர், ஆசிரியர்கள், இளைஞர்கள், யுவதிகள் இராகலை முச்சக்கரவண்டி சாரதிகள், நகர வர்த்தகர்கள் என சுமார் 1000ற்கும் மேற்பட்ட மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்திற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், தொடர் மின் துண்டிப்பு, எரிபொருள் விலையேற்றம், டீசல் தட்டுப்பாட்டினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இச்செயலைக் கண்டித்து குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
தோட்டத் தொழிலாளர்கள் இன்று பணிக்கு செல்லாமல் பதாதைகளை கையில் ஏந்தி, கறுப்பு கொடிகளை பிடித்துகொண்டு, கோஷங்களை எழுப்பியவாறு இராகலை தோட்டத்திலிருந்து உடப்புஸ்ஸலாவ பிரதான வீதி ஊடாக இராகலை நகர் சென்று, அங்கிருந்து பொலிஸ் நிலைய வீதி ஊடாக முருகன் ஆலயம் வழியே சென்று இராகலை எரிபொருள் நிலையத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது நகர வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.
க.கிஷாந்தன்