நுவரெலியா மாவட்டத்தில் தொடர் மழை பல இடங்களில் மண்சரிவு போக்குவரத்து பாதிப்பு.

0
168

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன.
இன்று (28) காலை கினிகத்தேனை நாவலபிட்டி பிரதான வீதியில் பகதுலவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஹட்டன் கண்டி,கினிகத்தேனை நாவலபிட்டி உள்ளி பிரதேசங்களுக்கான பொது போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

போக்குவரத்தை சரி செய்வதற்கான நடவடிக்கையினை வீதி போக்குவரத்து அதிகார சபை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக ஹட்டன் கொழும்பு ஹட்டன் நுவரெலியா ஹட்டன் கண்டி உள்ளிட்ட பிரதான வீதிகளில் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டு மண் திட்டுகள் சரிந்து வீழ்ந்துள்ளன. இதனால் இந்த வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக பயணிக்குமாறு போக்குவரத்து போலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக நீரேந்தும் பிரதேசங்களில் பதிவாகி வரும் அதிக மழை காரணமாக காசல்ரி, விமலசுரேந்திர, கெனியோன், லக்ஸபான, நவலக்ஸபான , மேல்கொத்மலை பொல்பிட்டிய உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நோர்ட்டன் பிரிஜ் பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தில் அனைத்து வான் கதவுகளிலும் நீர் இன்று (28) அதிகாலை முதல் வான் பாய்ந்து வருகின்றன.

தற்போது நுவரெலியா மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இரவு வேளையில் அடைமழை பெய்து வருகிறது இதனால் பல பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுகின்றன.இதனால் மண் மேடுகளுக்கும் மலைகளுக்கு சமீபமாக வாழும் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதே நேரம் அதிக மழை பெய்யும் போது நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்து நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்படலாம் என்பதனால் நீர்த்தேக்கங்களுக்கு கீழ் தாழ் நிலப் பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நீர்த்தேக்கங்களின் பொறுப்பான மின்சாரத்துறை பொறியியலாளர்கள் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here