பதுளை- செங்கலடி வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது!

0
22
பதுளை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பதுளை- செங்கலடி வீதியின் 13 ஆவது மைல்கல் பகுதியில் உள்ள மெத்தை கடைக்கு அருகில் நேற்று மாலை (05) மாலை 5.30 மணியளவில் கற்பாறைகள் சரிந்து வீழ்ந்ததனால் தடைப்பட்டிருந்த பொது போக்குவரத்து தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பதிப்பாளர் ஈ.எம்.எல். உதயகுமார தெரிவிக்கின்றார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்;
குறித்த பகுதியில் இவ்வாண்டின் ஆரம்ப பகுதியில் ஏற்பட்ட பாரிய கற்பாறைகள் சரிவு அனர்த்தம் காரணமாக பல நாட்களுக்கு போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. இதனால் பிபிலை, மொனராகலை , மட்டக்களப்பு, அம்பாறை போன்ற பகுதிகளினூடான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
நீண்ட நாட்களாக மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளின் பின்னர் வீதியில் வீழ்ந்திருந்த பாரிய கற்பாறைகள் அகற்றப்பட்டு கடந்த இரு மாதங்களாக இரு வழித்தடப் போக்குவரத்து இடம்பெற்று வந்த நிலையில் மீண்டும் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது .
வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் துரிதமாக செயற்பட்டு மீண்டும் ஒரு வழித்தடப் போக்குவரத்திற்கு பாதையை திறந்துள்ளனர். இப்பகுதியில் பாரிய அனர்த்தங்கள் ஏற்படக் கூடிய அவதான நிலைமை காணப்படுவதால் ஒரு வழித்தடப் போக்குவரத்தே தற்போதைக்கு இடம்பெறும் என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here