பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆனந்த விஜயபாலவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயத்தை முன்னிட்டு மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று புதன்கிழமை (13) அன்று முன்னெடுக்கப்பட்டது.
செம்மணி புதைகுழி , முல்லைத்தீவு மற்றும் சட்டவிரோத சமூக செயற்பாடுகளுக்கு நீதி கோரும் அகிம்சை வழி ஆர்ப்பாட்டமாக இது இடம்பெற்றது.
வடக்கு, கிழக்கில் இருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும், பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் பொதுக் கட்டிடங்கள் விடுவிக்கப்பட வேண்டும், செம்மணி புதைகுழி தொடர்பான நீதியான விசாரணை வேண்டும், முல்லைத்தீவு கபில்ராஜ் என்ற இளைஞனுக்கு நீதி வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், வைத்தியர் இ.சிறிநாத், மட்டக்களப்பு மாநகர சபை மேயர் சிவம் பாக்கியநாதன், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் சிவில் செயற்பாட்டாளர்கள், கட்சி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.