பிசுபிசுத்துப் போன ஹர்த்தால் – வழமைப் போல் இயங்கும் யாழ்ப்பாணம் ,முல்லைத்தீவு, அம்பாறை!

0
14

வடக்கு – கிழக்கில் முழு கதவடைப்பு போராட்டத்திற்கு இலங்கை தமிழரசு கட்சி அழைப்பு விடுத்திருந்த நிலையில், யாழ்ப்பாணம் வழமைப் போல் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் முல்லைத்தீவில் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை மையப்படுத்தி இந்த முழு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

முல்லைத்தீவில் உள்ள இராணுவ முகாமுக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் அப்பகுதியில் உள்ள ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல் காரணமாகவே குறித்த இளைஞர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், சம்பவம் குறித்து இரண்டு சிறப்பு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

அத்துடன், சம்பவம் தொடர்பில் மூன்று இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த இளைஞரின் மரணத்திற்கு நீதிகோரி வடக்கு – கிழக்கில் முழு கதவடைப்பு போராட்டத்திற்கு இலங்கை தமிழரசு கட்சி அழைப்பு விடுத்திருந்தது.

முன்னதாக கடந்த 15ஆம் திகதி இந்த கதவடைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், பல்வேறு காரணங்களுக்காக இன்று திங்கட்கிழமை (18ஆம் திகதி) பிற்போடப்பட்டிருந்தது.

இந்த கதவடைப்பு போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினர்கள் ஆதரவு வழங்கியிருந்த நிலையில், அதற்கு சமமாக எதிர்ப்புகளும் வெளியிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், வடக்கு மற்றும் கிழக்கில் இன்று முன்னெடுக்கவுள்ள கதவடைப்பு போராட்டம் தொடர்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து பொய்யான பிரச்சாரங்களால் மக்கள் ஏமாறுவதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

மேலும், இந்த சம்பவத்தின் உண்மைகளைத் திரித்து, தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம், சில அரசியல் குழுக்கள் வடக்கு, கிழக்கு மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

எனவே, இதுபோன்ற பிரச்சாரங்களுக்கு பொது மக்கள் ஏமாறக்கூடாது என்றும், உண்மைகளைப் புரிந்துகொண்டு அமைதியாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………

வடக்கு மற்றும் கிழக்கில் இன்று முழு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், முல்லைத்தீவு மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளும் வழமைப் போல் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் அதிகரித்த இராணுவ பிரசன்னத்திற்கு எதிராக இன்றையதினம் (18) கடையடைப்பு போராட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வழமை போல் அனைத்து செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றது.

வடக்கில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் அதிகரித்த இராணுவ பிரசன்னம் உள்ளிட்டவற்றிற்கு எதிராக இன்றையதினம் வடக்கு – கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த போராட்டத்திற்கு அரசியல்வாதிகள் முதல் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்திருந்த போதிலும், அதற்கு இணையாக பலரும் எதிர்ப்பும் வெளியிட்டிருந்தனர்.

இதனையடுத்து, கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ளும் நேரத்தை மட்டுப்படுத்தி தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரன் நேற்றையதினம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தும் அனைத்து செயற்பாடுகளும் வழமைபோல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் கல்முனை , சவளக்கடை, சம்மாந்துறை, மத்தியமுகாம், பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று உணவகங்கள், புடவைக்கடைகள் வீதியோர வியாபாரங்கள் போன்றவைகள் வழமை போன்று இயங்கியது.

இப்பகுதியில் உள்ள சில பாடசாலைகளில் மாணவர் வரவு குறைந்துள்ள போதிலும் கற்றல் செயற்பாடு இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது.

மாவட்டத்தில் வழமை போன்று அதிகளவிலான பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வந்தததை அவதானிக்க முடிந்தது.

பெரிய நீலாவணை, ஓந்தாச்சிமடம், காரைதீவு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர், அட்டப்பளம், சம்மாந்துறை, மாவடிப்பள்ளி, சவளக்கடை, மத்தியமுகாம், உள்ளிட்ட முக்கிய இடங்களில் பிரதேசங்களில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து வழமை போன்று செயற்பாட்டில் ஈடுபட்டனர்.

அத்தோடு பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்குச் சென்று பொலிஸாருடன் இணைந்து கடற்படை இராணுவம் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டனர்.

அத்துடன் கல்முனை பொது சந்தை உட்பட அதனை சூழ உள்ள பாதையோரங்களில் மரக்கறி வியாபாரம் களைகட்டியது.

மேலும் வியாபார நிலையங்கள், பல்பொருள் அங்காடிகள், பாடசாலைகள், மருந்தகங்கள், வங்கிகள், எரிபொருள் நிலையங்கள் வழமை போன்று திறக்கபட்டடு வியாபாரம் இடம்பெற்றது.

எனினும் சில இடங்களில் பொதுமக்களின் வருகை இன்மையால் வியாபார நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here