லக்னோவுக்கு எதிரான ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
159 ரன்கள் இலக்குடன் குஜராத் அணிக்கு மேத்யூ வாட் மற்றும் சுப்மன் கில் இருவரும் துவக்கம் தந்தனர். முதல் இன்னிங்சில் எப்படி ஷமி அதிர்ச்சி கொடுத்தாரோ, அதேபோல் துஷ்மந் சமீராவும் முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே சுப்மன் கில்லை டக் அவுட் செய்தார். ஒன் டவுனில் விஜய் சங்கர் இறங்கினார். இவரையும் தனது அடுத்த ஓவரில் கிளீன் போல்டக்கினார் சமீரா. இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி தடுமாற்றம் கண்டது. எனினும் மேத்யூ வாட் உடன் இணைந்து கேப்டன் ஹர்திக் பாண்டியா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் 30 ரன்களை கடந்த நிலையில் அடுத்தடுத்து அவுட் ஆகினர். அடுத்து வந்த டேவிட் மில்லரும் 30 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார்.
இறுதிக்கட்டத்தில் இரண்டு ஓவர்களுக்கு 20 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது. களத்தில் இருந்த அறிமுக வீரர் அபினவ் மனோகர் மற்றும் ராகுல் தெவாட்டியா 19வது ஓவரில் 9 ரன்கள் எடுத்தனர். கடைசி ஓவரில் ஆட்டத்தின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவை என்ற நிலையில் இறுதி ஓவரை ஆவேஷ் கான் வீசினார். அவரின் முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு அடித்து வெற்றியை உறுதி செய்தார். இதனால், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி தனது முதல் ஐபிஎல் தொடரின் முதல் வெற்றியை ருசித்தது. ராகுல் தெவாட்டியா அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்திருந்தார். லக்னோ அணியில் சமீரா அதிகபட்சமாக இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.
லக்னோ இன்னிங்ஸ்: குயின்டன் டி காக் – கேஎல் ராகுல் ஜோடி துவக்கம் கொடுத்தது. இந்த தொடரில் மிகவும் அபாயகரமான ஒப்பனர்களாக கருதப்படும் இந்த இருவரையும் முகமது ஷமி அடுத்தடுத்த ஓவர்களில் தனது வேகத்தால் வீழ்த்தினார். முதல் ஓவரின் முதல் பந்திலேயே கேஎல் ராகுலை டக் அவுட் செய்த ஷமி, தனது அடுத்த ஓவரில் 7 ரன்கள் எடுத்திருந்த குயின்டன் டி காக்கை கிளீன் போல்டக்கினார்.
இவர்கள் மட்டுமில்லாமல், தனது மூன்றாவது ஓவரில் மனீஷ் பாண்டேவையும் பெவிலியன் நோக்கி நடக்க வைத்தார் ஷமி. போதாக்குறைக்கு வருண் ஆரோனும் அதிரடி ஆட்டக்காரர் எவின் லூயிஸை அவுட் ஆக்க நான்கு ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது லக்னோ. ஐந்தாவது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த தீபக் ஹூடாவும், ஆயுஷ் பதோனியும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் குஜராத் பந்துவீச்சை பயமில்லாமல், சிக்ஸர் பவுண்டரிகளாக விளாசினார். தீபக் ஹூடா 55 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரஷீத் கான் பந்தில் அவுட் ஆனார்.
ஆனாலும் மறுமுனையில் இருந்த ஆயுஷ் பதோனி தனது அதிரடியை தொடர்ந்தார். அவரும் அரைசதம் கடந்து அணியை மீட்டெடுத்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் லக்னோ அணி 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக ஷமி மூன்று விக்கெட்டுகளையும், வருண் ஆரோன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.