புதிய கோவிட் வைரஸ் திரிபுகளை கட்டுப்படுத்துவதற்காக செயலூக்கி தடுப்பூசிகளை மீண்டும் செலுத்துவது சிறந்த தீர்வாக அமையாது என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.அத்துடன் புதிய திரிபுகளின் பரவலிலிருந்து சிறந்த பாதுகாப்பை வழங்கும் புதிய தடுப்பூசிகளுக்கும் உலக சுகாதார ஸ்தாபனம் அழைப்பு விடுத்துள்ளது. கோவிட் -19 தடுப்பூசிகளின் செயல் திறனை மதிப்பிடுவதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் உருவாக்கப்பட்டுள்ள நிபுணர் குழு, அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இதனை வலியுறுத்தியுள்ளது.
தற்போது கோவிட் வைரஸின் புதிய திரிபுகள் அதிகரித்து வருவதனால் செயலூக்கி தடுப்பூசியை மீண்டும் மீண்டும் செலுத்துவது சிறந்த வழியாக அமையாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 149 நாடுகளில் ஒமிக்ரோன் வைரஸ் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளைப் புதுப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடுமையான நோய் தாக்கங்கள் ஏற்படுவதைத் தடுப்பது மாத்திரமின்றி தொற்று உறுதியாவதை தடுப்பதற்கான தடுப்பூசிகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.