பெருந்தோட்ட கம்பனிகள் திடீரென தொழிற்சங்கங்களுக்கான சந்தாவை நிறுத்தியமை தொடர்பில் தொழிலாளர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்
தொழிற்சங்க அங்கத்துவ சந்தா பணத்தை தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பட்டியலிலிருந்து அறவிடுவதை பெருந்தோட்டக் கம்பனிகள் சில நிறுத்தி உள்ளன.
இதனால் மலையகத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் தோட்டத் தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகங்களுக்குமிடையில் பாரிய முரண்பாடுகள் ஏற்படக் கூடிய நிலைமை ஏற்படுமென மலையக தொழிற்சங்க முக்கியஸ்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேவேளை தோட்டத் தொழிலாளர்களும் கம்பெனிகளின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
1967 ஆம் ஆண்டு முதல் தோட்ட நிர்வாகங்கள் தொழிற்சங்கங்களுக்கு அறவிடப்படுகின்ற சந்தா பணத்தினை நேரடியாக தொழிற்சங்கங்களுக்கு அனுப்பும் வழமை காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து
2003 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தை தொடர்ந்தும் இந்த வழமை தொடரப்பட்டது.
ஆனால் தொழிற்சங்கங்களுக்கு முன்கூட்டியே எந்தவித அறிவிப்பும் வழங்காமல் பெருந்தோட்ட கம்பனிகள் சில தொழிற்சங்கங்களுக்கு செலுத்தவேண்டிய ஏப்ரல் மாதத்திற்கான சந்தா பணத்தினை தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து அறவிடுவதை நிறுத்தி உள்ளன.
இதன் காரணமாக தோட்டங்களில் தோட்ட தொழிற் சங்க தலைவர்கள்,
தொழிற்சங்க அங்கத்தவர்கள்,
தொழிற் சங்கப் பணியாளர்கள்,
தொழிற் பிணக்கு பேச்சுவார்த்தைகள் போன்ற
கட்டமைப்பு குறித்து கேள்வி எழும்பியுள்ளது.
இந்த நிலையில் தோட்டத்தில் சங்கங்களுக்கான சந்தா பணத்தை நிறுத்தியுள்ளமை தொடர்பில் பெருந்தோட்ட தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகள் விரைவில் தொழில் ஆணையாளரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.