13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்நிலையில், கொழும்புவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சமாரி அடப்பட்டு பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி இலங்கை அணி முதலில் பேட் செய்தது. அந்த அணி 12 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 46 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. சில மணி நேரங்களுக்குப் பிறகு மழை நின்றதால் போட்டி 20 ஓவராகக் குறைக்கப்பட்டது.
இறுதியில் இலங்கை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 105 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 20 ஓவரில் 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என தென் ஆப்பிரிக்காவுக்கு இலக்கு நிர்ணயிக்க்கப்பட்டது.
தொடக்க ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்குஅழைத்துச் சென்றது. இருவரும் அரை சதம் கடந்தனர்.
வோல்வோர்ட் 60 ரன்னும், தஜ்மின் பிரிட்ஸ் 55 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி விக்கெட் இழப்பின்றி 125 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்துக்கும் முன்னேறியது.