மக்களுக்கு சேவை செய்யக்கூடிய வகையில் அமைச்சு ஒன்று கிடைக்காத பட்சத்தில் பதவியை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை- இராதாகிருஸ்ணன் தெரிவிப்பு

0
183

மக்களுக்கு சேவை செய்யக்கூடிய வகையில் அமைச்சு ஒன்று கிடைக்காத பட்சத்தில் தான் அமைச்சு பதவியை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என முன்னால் கல்வி இராஜாங்க அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஸ்ணன் நேற்று (27.12.2018) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் அமைச்சு பதவி தொடர்பில் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கின்ற பொழுதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்

நான் கடந்த காலங்களில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலைமையின் பொழுது ஜனநாயத்தை பாதுகாக்க வேண்டும் என்ற வகையில் ஜக்கிய தேசிய கட்சிக்கு மலையக மக்கள் முன்னணி தனது முழுமையான ஆதரவை வழங்கியிருந்தது.

அதன் அடிப்படையில் தற்பொழுது மீண்டும் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டு அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் தமிழ் முற்போக்கு கூட்டணியில் இருவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அரசியல் குழப்ப நிலைமை ஏற்பட்ட பொழுது நாங்கள் அதாவது மலையக மக்கள் முன்னணி ரணில் விக்கரிமசிங்கவிடம் பேச்சுவார்த்தை நடத்திய பொழுது அவர் எங்களிடம் எனக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவி ஒன்றையும் பிரதி அமைச்சு பதவி ஒன்றையும் மலையக மக்கள் முன்னணிக்கு தருவதாக ஏற்றுக் கொண்டார். ஆனால் அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக மாறியதன் காரணமாக நாம் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்விற்கு எங்களுடைய கட்சி சார்பாக கடிதம் ஒன்றை வழங்கியிருந்தோம்.
ஆந்த கடிதத்தில் மலையக மக்கள் முன்னணியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு எனக்கு கல்வி இராஜாங்க அமைச்சையும் இந்து மத விவகார அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சையும் எங்களுடைய கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாருக்கு பிரதி அமைச்சு பதவியையும் கோரியிருந்தோம் இது தொடர்பாக கடிதம் மூலமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எங்களுடைய வேண்டுகோளை விடுத்திருந்தோம்.

ஆனால் பிரதமர் எனக்கு கபினட் அந்தஸ்து அற்ற அமைச்சு ஒன்றையும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாருக்கு பிரதி அமைச்சு பதவி ஒன்றையும் வழங்குவதாக தெரிவித்திருந்தார். அதனை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். ஆனால் தற்பொழுது அது தொடர்பில் இழுபறிநிலை ஏற்பட்டுள்ளதுடன் எனக்கு ஏதோ ஒரு புதிய அமைச்சை உருவாக்கிதருவதற்கு முயற்சி செய்துவருவதாகவும் பிரதி அமைச்சு தொடர்பில் எந்தவிதமான காத்திரமான ஒரு முடிவும் இல்லாமலும் இருப்பதை நான் கேள்விப்படுகின்றேன்.
அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் நான் அதாவது மலையக மக்கள் முன்னணி என்ற வகையில் நாம் அமைச்சு பதவிகளை பெற்றுக் கொள்ள மாட்டோம் அதே நேரத்தில் எதிர்கட்சிக்கு சென்று அமரவும் மாட்டோம் தொடர்ந்தும் எங்களுடைய ஆதரவை ஜக்கிய தேசிய கட்சிக்கு வழங்குவதற்கும் மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது.

நான் தனியே அமைச்சராக இருந்து கொண்டு அதன் பயன்களை அனுபவிப்பதைவிட மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். எனவே அவ்வாறான ஒரு அமைச்சு பதவி கிடைக்காத சந்தர்ப்பத்தில் மலையக மக்கள் முன்னணி அமைச்சு பதவியை பொறுப்பேற்காது மக்களுக்கு சேவை செய்ய முடியாத ஒரு அமைச்சை ஏற்பதைவிட ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது சிறந்தது என தான் கருதுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here