மத்திய மலைநாட்டில் கடும் மழை பொகவந்தலாவில் மண்சரிவு 05 வீடுகள் சேதம்.

0
199

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்;ந்து மத்திய மலை நாட்டில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
பொகவந்தலாவ பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ திரேசியா தோட்டத்தில் தொழிலாளர் தொடர் குடியிருப்பு ஒன்றின் மீது பாரிய மண்திட்டு ஒன்று இன்று 15 காலை 9.30 மணியளவில் சரிந்து வீழ்ந்ததனால் அந்த குடியிருப்பருகில் ஐந்து வீடுகளுக்கு பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இதனால் சமையலறையில் இருந்த சமையல் பாத்திரங்கள், உட்பட பல உடைமைகள் சேதமடைந்துள்ளன.

இந்த வீடுகளில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக காசல்ரி, கெனியோன், லக்ஸபான, நவலக்ஸபான, விமலசுரேந்திர, பொல்பிட்டிய, மேல் கொத்மலை உள்ளிட்ட நீர்த்தேக்கங்;களில் நீர் மட்டம் வெகு வேகமாக உயர்ந்து வருகின்றன.

இதனால் எவ்வேலையிலும் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்படலாம் எனவும் இதனால் நீர்த்தேக்கத்திற்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நோர்ட்டன் பகுதிக்கு பெய்து வரும் மழை காரணமாக அடிக்கடி விமல சுரேந்திர நீர்த்தேக்கத்தில் உள்ள வான் கதவுகளில் அடிக்கடி நீர் வான் பாய்ந்து வருவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் களனி கங்கைக்கு அருகாமையில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதிகளில் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளன. சில இடங்களில் மண்திட்டுக்களுக்கும் சரிந்து வீழ்ந்துள்ளதனால் இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக பயணிக்குமாறு போக்குவரத்து பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதே நேரம் மழையுடன் அடிக்கடி பனிமூட்டமும் காணப்படுவதனால் மலையக வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக தமக்குரிய பக்கத்தில் செலுத்துவதன் மூலம் வாகன விபத்துக்களை தவிர்த்து கொள்ளலாம் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பெருந்தோட்டங்களில் தொழிலுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாகவும் இதனால் தேயிலை உற்பத்தியும் வீழ்ச்சி கண்டு வருவதாக தோட்ட நிர்வாகங்கள் தெரிவிக்கின்றனர்.

அடிக்கடி பெய்து வரும் மழை காரணமாக விவசாயிகள் தங்களது தொழில்களை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளன. மற்றும் கால் நடை வளர்ப்பாளர்கள் தங்களுடைய கால் நடைகளுக்கு புல் அறுப்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதே நேரம் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுவதனால் நீர் மின் உற்பத்தி உச்ச அளவில் நடைபெற்று வருவதாக மின்சார சபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதனால் பல பிரதேசங்களில் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மண் சரிவு அபாயமிக்க இடங்களில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் மண்சரிவு அபாயம் காணப்படும் பட்சத்தில் அவ்விடங்களிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயருமாரும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here