இரண்டாம் கட்டத்தில் உள்வாங்கப்பட்ட 270 ஆசிரியர் உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் கிடைக்க பெறாமை குறித்து பெறும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இவர்கள் ஆசிரியர் உதவியாளர்கள் சேவைக்கு உள்வாங்கப்பட்டு 5 ஆண்டுகள் கடக்கும் இத்தருணத்திலும் மாதம் 10,000/= ரூபா ஊதியதையே பெறுகின்றனர். இது தொடர்பில் எமது செய்தி சேவைக்கு இன்று ஆசிரியர் உதவியாளர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்……..
“2014-08-08 வர்த்தமானியின் படி ஆசிரியர் உதவியாளர் நியமனத்திற்கு விண்ணப்பித்து 2014-12-28 தேர்வு பரீட்சை எழுதி அதன் பின்னர் கட்டம் கட்டமாக ஆசிரியர் உதவியாளர் நியமனம் வழங்கப்பட்டது.
அதனடிபடையில் 2015-05-19, 2015-09-12, 2015-12-15, 2016-05-16, 2018-05-16 என 3021 ஆசிரியர்களுக்கான நியமனம் பல்வேறு வழிகளில் வழங்கப்பட்டது .
எங்களனைவரதும் நியமன ஒப்பந்தமானது 5வருடங்களுக்குள் ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்ய வேண்டுமெனவும் அவ்வாறு நிறைவு செய்தால் மாத்திரமே நிரந்தர நியமனம் எனவும் கூறப்பட்டது.
அதனடிபடையில் முதற் கட்டத்தில் உள்வாங்கப்பட்டவர்கள் பயிற்சியை நிறைவு செய்து நியமனம் பெற்று விட்டனர்.
இரண்டாம் கட்டத்தில் உள்வாங்கப்பட்ட நாங்கள் பயிற்சியை நிறைவு செய்தும் நிரந்தர நியமனத்தை பெற முடியாது காணப்படுகின்றோம். எம்மோடு பயிற்சி பெற்ற சப்ரகமுவ மாகாணம், ஊவாமாகாணங்களில் கடமையாற்றுபவர்கள் நியமனத்தை பெற்ற போதும் மத்திய மாகாணத்தில் மாத்திரம் இவ்வாறு நியமனம் வழங்கப்படாமல் காணப்படுகின்றது .
இது ஒரு மனித உரிமை மீறல் செயற்பாடாகவே காணப்படுகின்றது. இச்சேவைக்குள் உள்வாங்கப்பட்டு 5 ஆண்டுகள் கடக்கும் இத்தருணத்திலும் நாங்கள் 10,000/= ரூபா ஊதியத்தில் சேவையாற்றுகின்றோம்.
இதுவரை நாங்கள் பாடசாலைகளில் ஏனைய ஆசிரியர்களுக்கு சமமாகவே கடமையாற்றுகின்றோம்.
எம்மில் பலர் புலமை பரிசில் பரீட்சை, க.பொ.த சா/த பரீட்சை என்பவற்றில் பல சாதானைகளை புரிந்திருந்தாலும் குறைந்த வருமானத்தில் மன உளைச்சலோடு கடமையாற்றுகின்றனர் .
இலங்கை முழுவதும் கல்வி சட்டங்கள் ஒன்றாகவே காணப்படுகின்ற போது ஏனைய மாகாணங்களில் நியமனம் வழங்கும் போது மத்திய மாகாணத்தில் மாத்திரம் நியமனம் வழங்கப்படாமைக்கு காரணம் என்ன?
தற்போது மத்திய மாகாணத்தில் கடமையாற்றும் 270 ஆசிரியர் உதவியாளர்களுக்கு தீர்வு கிடைக்குமா? எங்களின் எதிர்காலம் என்னவாகும்? உரியவர்கள் தீர்வை பெற்றுதர முன்வரவும்.”
ஆசிரிய உதவியாளர்
ச.சதீஷ்குமார்