மத்துகமை ஜெயகலா கொலை சந்தேகநபர் சிறிபால கைது; இன்று நீதிமன்றில் ஆஜர்;அமைச்சர் மனோ தலையீடு!

0
145

களுத்துறை மாவட்ட மத்துகமை ஹோர்கன் தோட்டத்தை சேர்ந்த கோவிந்தராஜா ஜெயகலா என்ற தமிழ் பெண்ணின் சந்தேகத்துக்கு இடமான மரணம் தொடர்பில் ஆர்.ஏ. சிறிபால என்ற முச்சக்கர வண்டி ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை இன்று மத்துகமை பொலிஸார் களுத்துறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வர். இவர் மீது கொலை குற்றம் சாட்டப்படும். இந்நடவடிக்கைகளை தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனின் பணிப்புரையின்படி, மேல்மாகாண தெற்கு வலய பிரதி பொலிஸ் மாஅதிபர் ரன்மல் கொடிதுவக்குவின் கண்காணிப்பில் மத்துகமை தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஜி. ஏ. எஸ். என். சேனாரத்ன முன்னெடுகின்றார்.

இதுபற்றிய ஜமமு ஊடக செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

களுத்துறை மாவட்ட மத்துகமை ஹோர்கன் தோட்டத்தில் வசித்த, மரணமடைந்த 26 வயதான இரு பிள்ளைகளின் தாய் கோவிந்தராஜா ஜெயகலா, பணி முடிந்து வீடு திரும்பும் போது, தான் பயணித்த முச்சக்கர வண்டியில் இருந்த வெளியில் பாய்ந்துள்ளார். இதனால் படுகாயமடைந்த கோவிந்தராஜா ஜெயகலாவை, அவர் பயணித்த வண்டி ஓட்டுனர் ஆர்.ஏ. சிறிபால தானே வைத்தியசாலையில் சேர்ப்பதாக கூறி எடுத்து சென்றுள்ளார். எனினும் வைத்தியசாலையில் சேர்க்காமல் இடை நடுவில் அவரை தூக்கி எறிந்துவிட்டு போயுள்ளார். பின்னர் ஊரவர்களின் உதவியால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஜெயகலா அதிக குருதி வெளியேற்றத்தால் அங்கு மரணமடைந்துள்ளார்.

வைத்தியசாலையில் சேர்ப்பதாக கூறி எடுத்து சென்ற, முச்சக்கர வண்டி ஓட்டுனர் ஆர்.ஏ. சிறிபால அவரை வைத்தியசாலையில் சேர்க்காமல் இடை நடுவில் கைவிட்டு சென்றமை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ தின இரவு இதுபற்றிய தகவலை ஜனநாயக மக்கள் முன்னணியின் களுத்துறை மாவட்ட அமைப்பாளர் ஆரோக்கியசாமி அமைச்சர் மனோ கணேசனின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

அமைச்சரின் பணிப்புரையை அடுத்து துரிதமாக செயற்பட்ட பொலிசார், வெசாக் விடுமுறை காரணமாக சிறிது தாமதமானாலும்கூட, தற்சமயம் தொடர் விசாரணையின் பின் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். ஆர்.ஏ. சிறிபால என்ற இந்நபர், கொழும்பில் பெருந்தெருக்கள் அதிகார சபையில் பணியாற்றுபவர். விடுமுறை காலங்களில் சொந்த ஊரில் முச்சக்கர வண்டி ஓட்டுபவர். இவரது வண்டி தொடர்பான விபரங்கள் அப்பகுதியில் அமைந்திருந்த வீதி கமராவில் முழுமையாக பதிவாகி இல்லாவிட்டாலும் கூட, பொலிஸ் விசாரனையில் விபரங்கள் வெளி வந்துள்ளன. அதனடிப்படியில் சந்தேக நபர் மீது கொலை குற்றம் சாட்டப்படுகிறது என பிரதி பொலிஸ் மாஅதிபர், அமைச்சரிடம் உறுதி அளித்துள்ளார்.

துரித பொலிஸ் நடவடிக்கைளுக்கு பாராட்டு தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன், தொடர் விசாரணைகளை முன்னெடுத்து, குற்றவாளிக்கு உரிய தண்டனையை பெற்று தரும் வரை ஓய வேண்டாம் என மேல்மாகாண தெற்கு வலய பிரதி பொலிஸ் மாஅதிபர் ரன்மல் கொடிதுவக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here